இலங்கை உலகக் கிண்ணம் செல்ல வாய்ப்புகள் எப்படி?

நியூசிலாந்திடம் 198 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்த இலங்கை அணிக்கு ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்கு நேரடி தகுதி பெறுவதற்கான வாய்ப்பு கை நழுவும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஒக்லாந்தில் கடந்த சனிக்கிழமை (25) நடந்த மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணி நிர்ணயித்த 275 ஓட்ட இலக்கை துரத்திய இலங்கை அணி 76 ஓட்டங்களுக்கே சுருண்டது.

இதனால் இலங்கை அணி இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெற மற்ற அணிகளின் போட்டி முடிவுகள் தமக்கு சாதகமாக இருப்பதற்கு எதிர்பார்க்க வேண்டி உள்ளது.

இதன்படி இலங்கை அணி தொடர்ந்தும் நேரடித் தகுதி பெற வேண்டுமானால் நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வென்று தொடரை கைப்பற்றுவது கட்டாயம் என்பதோடு தென்னாபிரிக்க அணி நெதர்லாந்துடன் ஆடவுள்ள இரு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் குறைந்தது ஒரு போட்டியில் தோற்க வேண்டும்.

அவ்வாறு நிகழாத பட்சத்தில் இலங்கை அணி அயல் நாட்டில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்காக வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சிம்பாப்வேயில் நடைபெறும் தகுதிகாண் போட்டிகளில் ஆட வேண்டிய நிலை ஏற்படும்.


Add new comment

Or log in with...