உர விநியோகத்தில் வாய்த்தர்க்கம்; பெண் விவசாய ஆராய்ச்சி அலுவலர் கொலை

- சம்பவம் தொடர்பில் 39 வயது நபர் கைது

இன்று (27) அதிகாலை தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெதொல்பிட்டிய, வெலிஆர பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெலியார, நெதொல்பிட்டிய பிரதேசத்தில் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தராக கடமையாற்றும் 30 வயதுடைய தீபஷிகா லக்ருவனி எனும் திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் அதே பகுதியில் விவசாய ஆராய்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருபவர் என்பதோடு, இன்றையதினம் (27) வீட்டில் இருந்து களப்பணி வேலைக்காக சென்று கொண்டிருந்த போது, ​​நேற்று (26) தனது கடமை தொடர்பான பணியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உரம் வழங்குவது தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இவ்வாறு கொலையில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலை தொடர்பில் 39 வயதான குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை தங்காலை நீதவானினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சடலம் பிரேதப் பரிசோதனைக்காக தங்காலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...