பழக்கமில்லாத நீர்நிலைகள் ஆபத்தானவை!

- பாதுகாப்பை உதாசீனப்படுத்தும் இளவயதினர்

இயற்கையும் ஒரு போதைதான். அதனை முழுவதுமாய் அனுபவிக்கும் போது சந்தோஷ மிகுதியால் என்ன செய்கின்றோம் என்றே சிலநேரங்களில் தெரியாது. அதனால் தான் இயற்கையை அனுபவிக்கும் பொழுது எமக்கு எதைப் பற்றியும் கவலைகள் வருவதில்லை. எமது பாதுகாப்பையும் கூட அலட்சியப்படுத்தி விடுகின்றோம்.

இலங்கையின் வெல்லவாய - எல்லேவல நீர்வீழ்ச்சி, ஆளில்லாத அடர்ந்த காட்டுக்குள் மலைகள், கற்பாறைகளுக்கு நடுவில் ஓடும் அருவியாகும்.

100 அடி உயரத்திலிருந்து கொட்டும் அருவியும் அதன் ஆர்ப்பரிக்கும் ஓசையும், புகைமூட்டமும் குளிர்ந்த நீர்த்தூறல்களும் வித்தியாசமான அனுபவத்தை தரும்.

வெல்லவாய எல்லேவல நீர்வீழ்ச்சி பண்டாரவளை பிரதான வீதியில் அடர்ந்த காட்டுக்குள்ளே அமைந்துள்ளது. வெல்லவாய நகரிலிருந்து சுமார் 8 கிலோமீற்றர் தூரத்தில் காட்டுக்குள் இந்த நீர்வீழ்ச்சி மறைந்துள்ளது.

வெல்லவாய நகரிலிருந்து மேற்குப்பக்கமாக எல்ல இராவணன்வெட்டு நீர்வீழ்ச்சியை நோக்கிய பண்டாரவளைப் பாதையில் சுமார் 3 கிலோமீற்றர் தூரம் பயணித்ததும் ஒரு சந்தி வரும். அதனருகே இடதுகைப் பக்கமுள்ள வீதியால் சென்றால் எல்லவல நீர்வீழ்ச்சியை அடையலாம்.

அவ்வீதி சுமார் 5 கி.மீ. தூரமானது. இடைநடுவில் அலிகொட்ட என்ற நீர்த்தேக்கமும் அணைக்கட்டு உள்ளது. அதனைக்கடந்து செல்கையில் எல்லவல கிராமம் வருகிறது.

அதனைதொடர்ந்து நீர்வீழ்ச்சியை அடைவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஒருகுறிப்பிட்ட தூரம் வரையே வாகனத்தில் பயணிக்கமுடியும். ஒருகட்டத்திற்கு மேல் வாகனத்தில் செல்ல முடியாது. கரடுமுரடான பாதை வழியே 1.5 கிலோமீற்றர் தூரம் நடக்க வேண்டும்.

உள்ளே செல்லச் செல்ல காணும் காட்சிகளும் அனுபவங்களும் புதுவிதமாக இருக்கும். செல்லும் வழியில் இடையிடையே சிறு நீரோடைகளும், அவை சலசலத்துப் பாயும் ஓசையும் உள்ளத்தை கொள்ளைகொள்ளும். ஆங்காங்கே எளிமையான வீடுகளையும் காணமுடியும்.

ஆரம்பத்தில் இப்படியானதோர் ஒரு இடம் இருப்பதே பலருக்கு தெரியாது. இது சமீபகாலத்தில் பிரபல்யமான ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.

எனினும் இங்கு ஆனந்தமாய் பொழுதை கழிக்க வந்த பல சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று நீரில் மூழ்கி பலியாகினர். அதற்கு காரணம் வெல்லவாய எல்லேவல நீர்வீழ்ச்சி அழகான சிறிய நீர்வீழ்ச்சியாக இருக்கின்ற போதிலும் அது ஆபத்தான பகுதியாகவே தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.

வெல்லவாய எல்லேவல நீர்வீழ்ச்சியில் மூழ்கி மிக குறுகிய காலப்பகுதியில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 17 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் தொற்றுக்கு முற்பட்ட காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வருகைதந்த போதிலும் அதன்பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்ததோடு இப்பகுதியில் உயிரிழப்புகளும் அதிகமாகியதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில் கொழும்பிலிருந்து வந்த இளைஞர் ஒருவர் வெல்லவாய எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். அச்சம்பவம் நடைபெற்று 13நாட்களுக்குள் காத்தான் குடியிலிருந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

2022 மார்ச் மாதமளவில் சுற்றுலா சென்ற அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஐவரில் 21,22 வயதுகளையுடைய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவ்வாறு பலர் உயிரிழந்ததையடுத்து வெல்லவாய எல்லேவல நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்க வெல்லவாய பிரதேசசபை நடவடிக்கை எடுத்திருந்தது.

அதனைதொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த வெல்லவாய எல்லேவல நீர்வீழ்ச்சி கடந்த வருடம் (2022) செப்டம்பர் (06) முதல் மீண்டும் திறக்கப்பட்டிருந்தது.

அருவியை சுற்றி பாதுகாப்பு கயிறுகள் அமைக்கப்பட்டு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுமாறு வெல்லவாய பிராந்திய சுற்றாடல் குழு அறிவுறுத்தல் விடுத்திருந்தது.

இத்தகையதொரு பின்னணியிலேயே வெல்லவாய எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கடந்த 21ஆம் திகதி நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் பதிவாகியிருந்தது.

கல்முனைக்குடி பள்ளி வீதியைச் சேர்ந்த முஹம்மட் சுஹ்ரி லாபிர், ஹனீபா வீதியைச் சேர்ந்த அபூபக்கர் ஹனாப், சாய்ந்தமருது 16ஆம் பிரிவைச் சேர்ந்த முகம்மட் முக்தார் முகம்மட் நெளபீஸ், சம்மாந்துறையைச் சேர்ந்த அஹ்மட் லெப்பை அப்ஸால் ஆகியோரே இச்சம்பவத்தில் உயிரிழந்தனர்.

கல்முனையிலுள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றில் கல்வி கற்கும் இந்த நான்கு இளைஞர்களும் நண்பர்களுடன் கடந்த 20ஆம் திகதி கல்முனையிலிருந்து வெல்லவாய எல்லேவல நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற போதே உயிரிழந்துள்ளனர். இவர்கள் உட்பட 10பேர் கொண்ட நண்பர்கள் குழுவொன்று சென்றுள்ளது. நீர்வீழ்ச்சியில் இவர்கள் நீராடிய போது, இவர்களில் நால்வர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்தனர். இதனையடுத்து இவர்கள் நால்வரும் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் சடலங்களாகவே மீட்கப்பட்டிருந்தனர்.

இதுதொடர்பில் பிரதேசவாசியொருவர் கருத்துதெரிவிக்கையில், வெல்லவாய எல்லேவல நீர்வீழ்ச்சி மிகவும் அழகான நீர்வீழ்ச்சியாகவிருக்கின்ற போதிலும் அதில் ஆபத்துக்கள் நிறைந்துள்ளன. சுற்றுலாவுக்கு வந்த வேகத்தில் நீர்வீழ்ச்சியில் இறங்கி நீராடச் செல்வதாலேயே இத்தகைய துர்பாக்கிய சம்பவங்கள் ஏற்படுகின்றன. இப்பகுதியில் நீராடுவது பாதுகாப்பற்றது. இதுதொடர்பில் சுற்றுலா பயணிகள் கவனம் செலுத்துவது அவசியம். இப்பகுதிக்கு வந்து இங்குள்ள அழகான காட்சிகளை கண்டுகளியுங்கள். எந்தக்காரணம் கொண்டும் நீர்வீழ்ச்சியில் இறங்கிக் குளிக்கவேண்டாம்.

நீர்வீழ்ச்சியின் நீராடும் பகுதி சிறியதாகவிருப்பதால் ஆழமில்லை என்று நினைக்கவேண்டாம். சிறுவயது முதல் நீராடிப் பழக்கப்பட்ட கிராமவாசிகள் மட்டுமே இதனுடைய ஆழத்தை அறிவார்கள். முன்னரை விட தற்போது குழிப்பகுதியின் ஆழம் அதிகரித்துள்ளது. உமாஓயா நீர்த்தேக்கம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அதிக ஆழமாகவிருந்தது. இறங்குவது கூட ஆபத்தானது. அதனை இங்குள்ள பிரதேசவாசிகள் அறிவார்கள். எனினும்

2015 ஆம் ஆண்டு உமாஓயா நீர்த்தேக்கம் ஆரம்பிக்கப்பட்ட போது தோண்டப்பட்ட கற்கள், மணல் என்பன வந்து சேர்ந்து நீர்வீழ்ச்சியின் குழியாகக் காணப்பட்ட பகுதி 2 அடி போல் நிரம்பியிருந்தது. அப்போது ஒரளவு இறங்கி நீராடக் கூடியாகவிருந்தது. தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிரம்பியிருந்த கற்கள், மணல் என்பன கரைந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளன. எனவே குழிப்பகுதியின் ஆழம் ஆரம்ப காலங்களை போல அதிகரித்துள்ளது. அதுவும் நீர்வீழ்ச்சி வந்து விழும் கற்பாறைகளுக்கு அருகில் ஆழம் அதிகமாகவுள்ளது.

அதுமட்டுமின்றி கற்பாறைகள், குளிரான காலநிலை என்பனவும் உயிராபத்துகளுக்கு காரணம். எனவே நீராடுவது உயிராபத்துக்களை ஏற்படுத்தும். கிராமவாசிகள் என்ற ரீதியில் இங்கு வரும் அனைவருக்கும் எங்களால் அறிவுரை கூறமுடியாது. நாங்கள் செல்லும் வழியில் சுற்றுலா பயணிகள் யாரையாவது சந்தித்தால் அறிவுறுத்தல் வழங்குவோம் என அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி வெல்லவாய எல்லேவல நீர்வீழ்ச்சி பெரிதாக சனநடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப்பகுதியிலேயே அமைந்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதனால் அவசர சூழ்நிலைகளில் உதவுவது சற்று கடினம். அதுமட்டுமின்றி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதைகளும் கரடுமுரடான காட்டுப்பகுதியாகவிருக்கின்றது. எனவே விபத்தொன்று நடந்தால் இலகுவில் மீட்பு படையினரால் கூட வரமுடியாது.

எனவே எந்த அளவிற்கு சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டுகின்றீர்களோ அந்த அளவிற்கு உங்களுடைய பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தவேண்டும். இலங்கையில் எழில்கொஞ்சும் நீர்வீழ்ச்சிகள், பள்ளத்தாக்குகள், மலைப்பிரதேசங்கள், அருவிகள், நீரோடைகள், கடற்கரைகள் என கண்டுகளிக்க ஏராளமான இடங்கள் உள்ளன. எனவே எந்த இடத்துக்கு சென்றாலும் முன்பின் தெரியாத இடங்களில் நீராடுவதை தவிர்க்கவும். அங்குள்ளவர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது. மழைக்காலங்கள், சீரற்ற காலநிலைகளின் போது நீர்நிலைகளில் இறங்க வேண்டாம். எதிர்பாராத விதமாக நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும்.

தற்போது பருவங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதுதொடர்பிலும் சுற்றுலா பயணங்களின் போது கவனத்திற் கொள்ளவும். மேலும் சிறுவயது முதலே தமது உயிருக்கு அச்சுறுத்தலான சூழலை இனங்காணல், சுயபாதுகாப்பு தொடர்பான அறிவு என்பன மாணவர்களுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் ஏற்படுத்தப்பட வேண்டும்.

வசந்தா அருள்ரட்ணம்


Add new comment

Or log in with...