இலங்கையில் எரிபொருள் விற்பனைக்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அனுமதி

- சீனா, அவுஸ்திரேலியா, அமெரிக்க நிறுவனங்களுக்கு வாய்ப்பு
- தலா 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்கவும் நடவடிக்கை

இலங்கையில் எரிபொருள் விற்பனை சந்தையில் நுழைவதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

இன்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

 

Shell Plc நிறுவனத்துடன் இணைந்து சீனாவின் Sinopec, அவுஸ்திரேலியாவின் United Petroleum, அமெரிக்காவின் RM Parks ஆகிய நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் சில்லறை சந்தைக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் கணக்கில் இட்டுள்ள பதிவின் ஊடாக தெரிவித்துள்ளார்.

மூன்று நிறுவனங்களுக்கு இலங்கையில் இயங்குவதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு வலுசக்தி குழு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய கொள்முதல் குழுக்கள் அனுமதி மற்றும் பரிந்துரையை வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த 3 நிறுவனங்களுக்கும், தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) கீழ் உள்ள முகவர்களால் இயக்கப்படும் தலா 150 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

20 வருடங்களுக்கு இலங்கையில் பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதி, களஞ்சியம், விநியோகம், விற்பனை ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட குறித்த 3 நிறுவனங்களாலும் புதிய இடங்களில் மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நிறுவப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...