கழிவுக் குழிக்குள் வீழ்ந்தவர், அவரை காப்பாற்ற சென்றவர் ஆகிய இருவரும் பலி

கழிவுக் கான் கட்டமைப்பை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த கொழும்பு மாநகர சபை ஊழியர்கள் இருவர் அதற்குள் வீழ்ந்து மரணித்துள்ளனர்.

இன்று (27) பிற்பகல் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டியாவத்தை சந்தி பிரதேசத்தில் கழிவுக் கான் கட்டமைப்பை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த கொழும்பு மாநகர சபை ஊழியர்கள் மூவரில் இருவர் அதற்குள் வீழ்ந்து, உயிராபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மரணமடைந்தவர்கள் 28 மற்றும் 38 வயதுடைய கொழும்பு 10 மற்றும் கொழும்பு 14 பிரதேசங்களைச் சேர்ந்த கொழும்பு மாநகர சபையின் துப்புரவு தொழிலாளிகள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முதலில் ஒருவர் குறித்த குழியில் வீழ்ந்துள்ளார். அவரை காப்பாற்ற மற்றைய நபரும் அதற்குள் இறங்கிய வேளை, அவரும் அக்குழியில் வீழ்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Add new comment

Or log in with...