மின் கட்டண அதிகரிப்புக்கு எதிரான 3 மனுக்களையும் மே 09 இல் எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

- குறைந்த அலகு பாவனையாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது
- ஆணைக்குழு சட்டத்தை மீறி கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டண அதிகரிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 3 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விண்ணப்பங்களை எதிர்வரும் மே 09ஆம் திகதி எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மின்சாரக் கட்டண அதிகரிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 3 அடிப்படை உரிமை மனுக்கள் கடந்த வெள்ளிக்கிழமை (24) உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ். துரைராஜா, நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ், நீதியரசர் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில், எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த முடிவை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த மனுக்கள் தொடர்பில் அதன் சட்டத்தரணிகளால் விளக்கமளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனை எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

அத்துடன் குறித்த மனுக்கள் தொடர்பான பிரதிவாதிகளுக்கு ஏப்ரல் 20 ஆம் திகதிக்குள் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கும், மனுதாரர்களுக்கு ஏப்ரல் 28 ஆம் திகதிக்குள் அவற்றிற்கு எதிரான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த அனைத்து மனுக்களிலும் குறைந்த மின்சார அலகு பாவனைக்கான கட்டணங்களில் பாரியளவான மற்றும் பாரபட்சமான அதிகரிப்பு மற்றும் அதிக நுகர்வு அலகு மின்சாரக் கட்டணத்தில் அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை எனும் விடயம் சவால் விடுக்கப்பட்டுள்ளது.

இம்மனுக்களில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்கவினால் ஒரு மனுவும், மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி நுகர்வோர் சங்கத்தின் ஆனந்த சாகர தேரர் உள்ளிட்ட 4 பேரினால் ஒரு மனுவும், மின்சார பொறியியலாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான அசோக அபேகுணவர்தனவினால் மற்றுமொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு (SC/FR/86/2023), இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் அதன் ஏனைய உறுப்பினர்களான சத்துரிகா விஜேசிங்க, டக்ளஸ் நாணயக்கார, எஸ்.ஜி. சேனாரத்ன, இலங்கை மின்சார சபை உள்ளிட்ட மேலும் 5 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இம்மனு சார்பில் சுரேன் பெனாண்டோ மற்றும் கியாதி விக்ரமநாயக்க, மோகன் பாலேந்திர ஆகிய சட்டத்தரணிகள் குழாம் முன்னிலையாகியிருந்தது.

குறித்த மனு விண்ணப்பத்தில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றாமல், இலங்கை மின்சார சபை கோரிய மின்சார கட்டணத் திருத்தத்தை ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் அங்கீகரிக்க முடிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி நுகர்வோர் சங்கத்தின் ஆனந்த சாகர தேரர் உள்ளிட்ட 4 பேரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் (SC/FR/89 /2023) பிரதிவாதிகளாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அதன் தலைவர், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏனைய 3 உறுப்பினர்கள்.

மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டத்தரணிகளான மஞ்சுள பாலசூரிய, சுரேன் ஞானராஜ், நிரஞ்சன் அருள்பிரகாசம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

மின்சார பொறியியலாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான அசோக அபேகுணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவின் (SC/FR/92/2023) பிரதிவாதிகளாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அதன் தலைவர், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் மேலும் 6 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

குறித்த மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சட்டத்தரணிகளான தர்ஷிகா அரியநாயகம், விரான் கொரியா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

குறித்த அனைத்து மனுக்கள் சார்பிலும் இலங்கை மின்சார சபை (CEB) சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜராகியிருந்தார். தங்களது தீர்மானம் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களின் மூன்று உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன ஆஜரானார். சட்ட மா அதிபர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி திருமதி விவேகா சிறிவர்தன ஆஜராகியிருந்தார்.


Add new comment

Or log in with...