பல் துலக்கியைக் கொண்டு தப்பிய கைதிகள் சிக்கினர்

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் கைதிகள் இருவர் பல் துலக்கியைக் கொண்டு சிறைச்சாலையிலிருந்து தப்பியுள்ளனர்.

எனினும் ஜோன் கர்ஸா, ஆர்லி நீமோ ஆகிய இருவரும் சில மணிநேரத்திலேயே பிடிபட்டனர். அவர்கள் பென்கேக் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

கைதிகள் நியுபோர்ட் நியுஸ் சிறைச்சாலையிலிருந்து கடந்த திங்கட்கிழமை (20) இரவு தப்பித்தனர்.

இருவரும் பல் துலக்கி, உலோகப்பொருள் ஆகியவற்றின் உதவியுடன் சுவரில் துவாரத்தை உருவாக்கினர். அந்தத் துவாரம் வழி சென்ற அவர்கள் இன்னொரு சுவர் மீது ஏறி சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றனர்.

கைதிகள் அருகில் இருந்த வட்டாரத்திலுள்ள உணவகத்துக்குச் சென்றபோது குடியிருப்பாளர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து அடுத்த நாள் (21 மார்ச்) அதிகாலை அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கர்ஸா நீதிமன்றத்தை அவமதித்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்கும் நீமோ கடன்பற்று அட்டை மோசடி போன்ற குற்றங்களுக்கும் சிறை அனுபவித்து வருகின்றனர்.

சிறைச்சுவரின் கட்டுமானத்தில் பலவீனம் இருந்ததாகவும் கைதிகள் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.


Add new comment

Or log in with...