ஒருநாள் உலகக் கிண்ணம் ஒக்டோபர் 05ஆம் திகதி ஆரம்பம்

12 இந்திய நகரங்களில் நடத்தத் திட்டம்

2023 ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெற வாய்ப்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையை மேற்கோள்காட்டி ‘கிரிக்கின்போ’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பத்து அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கிண்ணத்திற்காக குறைந்தது ஒரு டஜன் மைதானங்கள் பெயரிடப்பட்டிருப்பதோடு, இறுதிப் போட்டி அஹமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, பங்களுரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, குவாஹாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோவ், இன்தோர், ராஜ்கோட் மற்றும் மும்பையிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன. 46 நாட்கள் நீடிக்கவிருக்கும் இந்தத் தொடரில் மூன்று நொக் அவுட் போட்டிகள் உட்பட மொத்தம் 48 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

எனினும் போட்டிகள் நடைபெறும் குறிப்பிட்ட மைதானம் அல்லது அணிகள் பயிற்சிப் போட்டிகளில் ஆடும் மூன்று நகரங்கள் பற்றிய விபரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்தியாவில் மாறுபட்ட காலத்தில் மாறுபட்ட இடங்களில் பருவமழைக்காலம் வரும் நிலையில் அந்த சிக்கல் காரணமாகவே மைதானங்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் குறைந்தது ஓர் ஆண்டுக்கு முன்னதாகவே போட்டி அட்டவணையை அறிவிக்கின்றபோதும், இந்திய அரசாங்கத்தின் அனுமதிக்காகவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை காத்துள்ளது.

இதில் தொடருக்காக வரிவிலக்கு வழங்குவது, பாகிஸ்தான் அணிக்கு விசா அனுமதி வழங்குவது ஆகிய இரு முக்கிய விடயங்கள் கருத்தில் கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. 2013 ஆரம்பம் தொடக்கம் ஐ.சி.சி போட்டிகள் தவிர்த்து பாகிஸ்தான் அணி இந்தியாவில் ஆடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...