அரசின் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன்

சபையில் முன்னாள் அமைச்சர் குமார வெல்கம

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப் போவதாக முன்னாள் அமைச்சர் குமார வெல்கம பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பு, எதிர் தரப்பு என இரு பக்கத்திலுமே திருடர்கள் உள்ளனர். அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில் திருடரைப் பிடிக்க வேண்டும் என விமர்சிப்பதை விடுத்து நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்திப்பதே சிறந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

மோசடிகளுக்கு உட்பட்டுள்ள நிதி தற்போது நாட்டில் கிடையாது. அந்த வகையில் திருடர்களைப் பற்றி பேசுவது, விமர்சிப்பது பயனற்றது என தெரிவித்த அவர், நாட்டின் எதிர்காலத்தையும் இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரையையடுத்து கருத்துக்களை முன்வைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளமை தொடர்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாடு வங்குரோத்து நிலைய அடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கடுமையான உழைப்பிற்கிணங்கவே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.

அது தொடர்பில் எதிர்க்கட்சி என்ற வகையிலும் மகிழ்ச்சியடைய வேண்டும்.

தற்போதைய நிலையில் அதற்கான முழுமையான ஒத்துழைப்பை நான் வழங்குவேன். நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. எல்லாக் காலங்களிலும் திருடன், திருடன் என இருதரப்பினராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.ஆனால் எந்த திருடனும் இதுவரை பிடிபடவில்லை.பிடிக்கப்பட்ட திருடனும் இல்லை. பாராளுமன்றத்தில் இரு புறமுமே திருடர்கள் உள்ளார்கள் என்பதே உண்மை.

பாராளுமன்றத்தில் 30 வருடகால அனுபவத்தைக் கொண்டவன் என்ற அடிப்படையில், ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் திருடர்கள் உள்ளனர் அவர்கள் பிடிப்பட்டால் அனைவரும் நெருக்கடிக்குள்ளாவார்கள் என்பதால் திருடர்கள் ஒருபோதும் அகப்படமாட்டர்கள்.

ஜனாதிபதியால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியாது என ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டார்கள்.

ஆனால் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அதன் பயனை முழுமையாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். நாட்டின் எதிர்காலத்தையும் இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...