இந்தியா-பூட்டான் செயற்கைகோள் திட்டம் புவி நிலையம் திம்புவில் திறந்து வைப்பு

இந்தியா - பூட்டான் செய்மதிக்கான புவி மத்திய நிலையம் திம்புவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  பூட்டான் வெளிவிவகார அமைச்சர் லியோன்போ டன்டி டொர்ஜி, அந்நாட்டு தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சர்  லியோன்போ கர்மா டொன்னென் வாங்டி, பூட்டானுக்கு விஜயம் செய்துள்ள எஸ். சோமநாத் தலைமையிலான இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) பிரதிநிதிகள், பூட்டானுக்கான இந்தியத் தூதுவர் சுதாகர் தலேலா ஆகியோர் இணைந்து இந்நிலையத்தை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துள்ளனர். 

கடந்த வருடம் நவம்பர் மாதம் இஸ்ரோ அமைப்பு பூட்டானின் செய்மதி உட்பட ஒன்பது நனோ செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வைத்துள்ளது. அதன் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள அடைவுகள் மற்றும் அனுபவங்கள் குறித்து எஸ். சோமநாத் தலைமையிலான இஸ்ரோ  அமைப்பு பிரதிநிதிகள், பூட்டான் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினருடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளதோடு பகுப்பாய்வும் செய்திருக்கின்றனர். 

அதேநேரம் இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இடையிலான விண்வெளி ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், தொழில்நுட்ப உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்பன குறித்தும் இச்சந்திப்பின் போது இரு தரப்பினரும் கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டுள்ளனர். 

இது தொடர்பில் பூட்டானிலுள்ள இந்தியத் தூதரகம் விடுத்துள்ள ட்வீட்டில், இச்செய்மதித்திட்டம் பூட்டான் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பூட்டானின் செய்மதித் தரவுகள் ஊடாக உள்நாட்டு நீரின் தரம், காடு மற்றும் உயிர்க்கோளம், பனி மற்றும் பனிப்பாறை உறைவு, பூட்டானின் புவியியல் மற்றும் நீரியல் என்பவற்றை மதிப்பாய்வு செய்வதற்கு பயன்படுத்தப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...