மில்லியன் கணக்கில் செத்து மிதந்த மீன்கள்

தங்களது நகரை ஒட்டிப் பாயும் ஆற்றில் மில்லியன் கணக்கான மீன்கள் செத்து மிதந்தது அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம், மெனிண்டீ நகரவாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டார்லிங்–பாக்கா ஆற்றில் இப்படி பெரும் எண்ணிக்கையான மீன்கள் செத்து மிதந்தது முதன்முதலில் கடந்த வெள்ளிக்கிழமை (17) கண்டறியப்பட்டது.

இப்போது வீசும் வெப்ப அலைதான் இதற்குக் காரணம் என்று  மாநிலத்தின் நதி ஆணையம் தெரிவித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் அவ்வாற்றில் இதேபோன்று மீன்கள் மடிந்து மிதந்தன. ஆனாலும், இப்போதைய நிகழ்வுதான் மிக மோசமானது என்று மெனிண்டீ நகரவாசிகள் கூறினர்.

செத்து மிதக்கும் மீன்கள் நீரிலிருந்து அதிக உயிர்வாயுவை எடுத்துக்கொள்ளும் என்பதால் மீன்கள் மடிவது தொடரலாம் என்று அந்நகரைச் சேர்ந்த கிரேமி மெக்ரேப் என்பவர் கூறினார்.

இதனால் அங்கு கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மெனிண்டீ நகரவாசிகளின் முக்கிய நீராதாரமாக அந்த ஆறு திகழ்கிறது. இதனால் அங்கு நீர் விநியோகமும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Add new comment

Or log in with...