- 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 இற்கும் மேற்பட்டோர் பாடசாலையில் தங்கவைப்பு
- குறித்த பகுதிக்கு செந்தில் தொண்டமான் நாளை விஜயம்
பண்டாரவளை - பூனாகலை, கபரகல தோட்டத்தில் நேற்றிரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், எழுவர் காயமடைந்துள்ளனர். தெய்வாதீனமாக எவருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
பண்டாரவளை பகுதியில் நேற்று (19) மாலை முதல் அடை மழை பெய்துள்ளது. இந்நிலையில் கபரகலை தோட்ட வைத்தியசாலை அமைந்துள்ள பகுதியிலேயே மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் இரண்டு லயன் குடியிருப்பு தொகுதிகள் அமைந்துள்ளன.
30 முதல் 40 வரையான வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட கிளை தெரிவித்துள்ளது.
காயமடைந்த எழுவரில் இருவர் கொஸ்லந்த வைத்தியசாலையிலும், இருவர் தியதலாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 இற்கும் மேற்பட்டோர் பூனாகலை இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினர் உரிய அதிகாரிகளுடன் இணைந்து பிரதேச மக்கள் மற்றும் ஹல்துமுல்ல பிரதேச சபை தலைவர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று இன்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக வைத்திய சாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தற்காலிகமாக பாதுகாப்பான முறையில் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, உடனடியாக இங்கு மீட்பு பணிகளை முன்னெடுக்கவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கவும் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தலைவருடன் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பூனாகலை கபரகல தோட்ட முகாமையாளரை தொடர்பு கொண்ட செந்தில் தொண்டமான், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 24 மணித்தியாலயத்திற்குள் மாற்று இடங்களை வழங்காவிடின், தோட்ட தொழிலாளர்களை வைத்து, பாதிக்கப்பட்ட மக்கள் தோட்ட முகாமையாளரின் இல்லத்தில் தங்கவைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு செந்தில் தொண்டமான் நாளை விஜயம்!
பண்டாரவளை பூனாகலை - கபரகலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் நாளை நேரடி விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகம் மாற்று இடங்களையும், பாதுகாப்பு வசதிகளையும் செய்துகொடுக்காவிடின் மக்களுடன் கலந்துரையாடி பலவந்தமான தீர்மானங்களை நிர்வாகத்துக்கு எதிராக எடுக்க வேண்டிய நிலை உருவாகுமென செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கணிசமான தொகையை நட்ட ஈடாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
(ஹற்றன் சுழற்சி நிருபர்)
Add new comment