ஆப்கானின் கிரிக்கெட் தொடர்பில் ஐ.சி.சி நாளை முக்கிய பேச்சு

ஆப்கானிஸ்தானில் மகளிர் கிரிக்கெட் அணி வெளியேற்றப்பட்ட நிலையில் அதன் சர்வதேச அந்தஸ்து பற்றி சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து அந்நாட்டு மகளிர் கிரிக்கெட் அணி 20 மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றது. இதில் பெரும்பாலானவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் அவசர விசா அனுமதி கிடைத்தது.

சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலின் முழு அங்கத்துவம் பெற்றிருக்கும் ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட்டுக்கு இடமளிக்க வேண்டி உள்ளது.

இந்நிலையில் ஐ.சி.சி குழுக் கூட்டம் வரும் திங்கட்கிழமை டுபாயில் நடைபெறவுள்ளது.

நாட்டில் உள்ள விளையாட்டு நிர்வாகத்தினர் தம்முடன் எந்தத் தொடர்பையும் ஏற்படுத்தவில்லை என்று ஆப்கான் மகளிர் அணி உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது பற்றி அவர்கள் கடந்த டிசம்பரில் ஐ.சி.சிக்கு எழுதியபோதும், அது ஆப்கான் கிரிக்கெட் சபையின் பிரச்சினை என்று அப்போது ஐ.சி.சி கூறியிருந்தது.

“அவர்கள் எம்முடன் ஏன் பேச விரும்பவில்லை என்று எமக்குத் தெரியவில்லை. எமது எதிர்காலம் பற்றி தெரிந்து கொள்ளும் உரிமை எமக்கு உள்ளது” என்று 18 வயதான ஆப்கான் வீராங்கனை பைரூசா தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து ஆப்கானை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஐ.சி.சி முக்கிய முடிவை எடுக்கும் என்று இந்த பெண்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆப்கான் கிரிக்கெட் வளர்ச்சியில் அவுஸ்திரேலியா முக்கிய பங்காற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...