பாடசாலை தவணை பரீட்சைகளை ஒத்திவைக்க பணிப்புரை

நாளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் கருதி பாடசாலைகளின் தவணைப் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை (15) நடைபெறவிருந்த பாடசாலை தவணைப் பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மேல் மற்றும் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் நாளை (15) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தரம்  9 மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகளை மார்ச் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தரம் 10,  11 மாணவர்களுக்கான பாடசாலை தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதிக்கும் ஒத்திவைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் நாளை நடைபெறவிருந்த தரம் 6 - 9 வரையான மாணவர்களுக்கான பரீட்சைகளை மார்ச் 17ஆம் திகதிக்கும், தரம் 10, 11 மாணவர்களுக்கான பரீட்சைகளை மார்ச் 22ஆம் திகதிக்கும் ஒத்திவைக்குமாறு மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நாளை நடைபெறவிருந்த தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் 22 ஆம் திகதி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை திட்டமிடப்பட்டுள்ள பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக, மாணவர்கள் எதிர்நோக்கக்கூடிய போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...