சூப் உணவுப் பொதியில் சூட்சுமமாக கொக்கைனை கடத்திய மசிடோனிய பிரஜை கைது

- ரூ. 1 கோடி 70 இலட்சம் பெறுமதி

சூட்சுமமாக கொக்கைனை கடத்திய மசிடோனிய பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று பிரேசிலில் இருந்து வந்த சந்தேகத்திற்கிடமான மசிடோனிய பிரஜை ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் தடுத்து சோதனையிட்டனர்.

அங்கு, அவரது பயணப் பையில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 350 கிராம் கொக்கைனை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேக நபர் கட்டார் எயார்வேஸ் விமானமான QR664 மூலம் இன்று (13) மு.ப. 8.30 மணியளவில் இலங்கை வந்தடைந்துள்ளார்.

மீட்கப்பட்ட கொக்கைனை நான்கு பொதிகளில் வைக்கப்பட்டு சூப் பொதிகள் போன்று அதனை பொதியிடப்பட்டிருந்ததாக, சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கொக்கைனின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 17 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் வயது சுமார் 54 எனவும் அவர் முதல் தடவையாக இலங்கைக்கு வந்துள்ளார் எனவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர் மற்றும் போதைப்பொருட்கள், மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...