இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்க தலைவியாக அமைச்சர் பவித்ரா நியமனம்

இலங்கை – ஐரோப்பிய  ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவியாக அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி அண்மையில் (09) தெரிவு செய்யப்பட்டார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்துக்கான நிர்வாகிகளைத் தெரிவுசெய்வதற்கான விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவின் தூதுவர் டெனிஸ் சைபி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் கலந்துகொண்டார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியகலாநிதி) உபுல் கலப்பதி, ஹெக்டர் அப்புகாமி ஆகியோர் இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உப தலைவர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

ஐரோப்பிய ஒன்றியமானது வறுமை ஒழிப்பு, ஜனநாயக ஆட்சி, உள்நாட்டு அபிவிருத்தி, விவசாயம், நீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மீட்சி மற்றும் மறுசீரமைப்புக்குப் பல்வேறு உதவிகளை வழங்கியிருப்பதுடன், 2014 முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அபிவிருத்தி உதவியின் ஊடாக நிதி உதவிகளை வழங்கியிருப்பதாக இங்கு உரையாற்றிய சபாநாயகர் குறிப்பிட்டார். நாட்டில் கொவிட்-19 தொற்றுநோய் நிலவிய காலப் பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உதவிகளையும் அவர் நினைவுகூர்ந்தார்.

அத்துடன், இந்த வருட மே மாதம் நடுப் பகுதியில் இலங்கைக்கு வரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்  தெற்காசிய நாடுகள் விவகாரங்களுக்கான தூதுக் குழுவினரை வரவேற்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

கடந்த 20 வருடங்களில் ஐரோப்பிய ஒன்றியம் மீளச் செலுத்தத் தேவையற்ற அல்லது நிபந்தனைகள் அற்ற நன்கொடையாக 8 பில்லியன் யூரோவை இலங்கைக்காக வழங்கியிருப்பதாகவும்  இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவின் தூதுதுவர் டனிஸ் சைபி தெரிவித்தார். கிராமப்புற அபிவிருத்தி, நல்லிணக்கம் ஆகியவற்றில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு உதவியுள்ளதாகவும், பசுமைப் பொருளாதாரம் மற்றும் சமூக ஒற்றுமையை ஸ்தாபிப்பதில் மேலும் உதவுவதற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

ஆசியாவில் ஜனநாயகத்தின் மாதிரியாக இலங்கை விளங்குகிறது என தாம் நம்புவதாகவும், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் இலங்கையின் மீள்தன்மை ஜனநாயகம் எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துக்காட்டுகிறது என்றும் தூதுவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயற்பட எதிர்பார்ப்பதாக இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவர் அமைச்சர் பவித்திராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...