கொழும்பில் கட்டுமானப் பணிகள் கைவிடப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பில் தீர்மானம்

- அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல்

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியுடன் கொழும்பில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தனது அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இதற்கமைய குறித்த பரிந்துரைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான அருந்திக பெனாண்டோ மற்றும் தேனுக விதானகமகே ஆகியோர் தலைமையில் அண்மையில் (10) நடைபெற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

கூடிய வர்த்தகப் பெறுமதியைக் கொண்ட கொழும்பின் நிலப்பரப்பில் க்ரிஷ், ஹயட் போன்ற கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் கைவிடப்பட்டிருப்பதால் பாரிய அநீதி ஏற்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ இங்கு சுட்டிக்காட்டினார். எனவே, இவை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகளை கொள்வனவு செய்தவர்களிடமிருந்து தவணைகளை அறவிடுவதில் சில சலுகைவாய்ந்த நடைமுறைகளை பின்பற்றுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அதிகார சபையின் நிதித்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சலுகைகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கு பயன்படக்கூடிய கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளை சட்டக் கட்டமைப்புக்கு உட்பட்டதாக உரிய முதலீட்டாளர்களுக்கு உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

குறித்த நிலத்தின் உரிமையை திணைக்களத்திடம் வைத்துக்கொண்டு சுற்றுலாத்துறைக்கு தற்காலிக நிர்மாணப்பணிகளுக்கு காணி வழங்குவது அவசியம் எனவும் அதற்கு இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவு சிறந்த உதாரணமாக விளங்குவதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதன்படி, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுடன் தொடர்பு கொண்டு அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, குணதிலக்க ராஜபக்ஷ, ஜகத் குமார சுமித்ராராச்சி, மஞ்சுளா திசாநாயக, ஜகத் சமரவிக்ரம மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...