வேகப்பந்து வீச்சாளர்களின் உதவியோடு இரண்டாவது நாளில் இலங்கை ஆதிக்கம்

முக்கிய விக்கெட்டான கேன் வில்லியம்சன் உட்பட நியூசிலாந்து அணியின் ஆரம்ப வரிசையை துவம்பசம் செய்த இலங்கை பந்துவீச்சாளர்கள் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்த உதவினர்.

கிறைஸ்சேர்ச்சில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவின்போது நியூசிலாந்து அணி 162 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியை சந்தித்துள்ளது.

ஹேக்லி ஓவலின் புற்கள் கொண்ட பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளத்திலும் இலங்கை தனது முதல் இன்னிங்ஸுக்கு 355 ஓட்டங்களை பெற்றது. 305 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையிலேயே இலங்கை நேற்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.

மேலும் 17 ஓவர்களுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மேலும் 50 ஓட்டங்களை சேர்த்து முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையை பெற்றது. 39 ஓட்டங்களுடன் களமிறங்கிய தனஞ்சய டி சில்வாவால் மேலும் ஏழு ஓட்டங்களையே பெற முடிந்தது.

இரண்டாவது நாள் ஆட்டத்தின் முதலாவது ஓவரிலேயே 11 ஓட்டங்கள் பெறப்பட்டபோதும் அடுத்து வீச வந்த நியூசிலாந்து அணித் தலைவர் டிம் செளதி, டி சில்வாவை 46 ஓட்டங்களுடன் வெளியேற்றினார்.

நியூசிலாந்து அணிக்கு இரண்டாவது புதிய பந்து கிடைத்ததை அடுத்து 22 ஓட்டங்களுடன் இருந்த கசுன் ராஜத்தவின் விக்கெட்டை மட் ஹென்றி சாய்த்தார். பின்னர் கடைசி வரிவை விக்கெட்டுகள் சொற்ப ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

இதில் டிம் செளதி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு ஹென்றி 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி ஆரம்ப விக்கெட்டுக்கு 67 ஓட்டங்களை பெற்றபோதும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் மேலும் 9 ஓட்டங்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நிதானமாக ஆடி வந்த டெவோன் கொன்வோயை 30 ஓட்டங்களுடன் அசித்த பெனர்னாண்டோ வெளியேற்றினார். முன்னணி துடுப்பாட்ட வீரர் கேன் வில்லியம்சன் ஒரு ஓட்டத்தை பெற்ற நிலையில் லஹிரு குமாரவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து வந்த ஹென்றி நிலோசினால் 2 ஓட்டங்களையே பெற முடிந்தது.

இந்நிலையில் ஆரம்ப வீரர் டொம் லதம் மற்றும் டரில் மிட்சல் 4 ஆவது விக்கெட்டுக்கு அரைச்சத இணைப்பாட்டம் ஒன்றை பெற்றபோதும் லதம் 67 ஓட்டங்களை பெற்றிருந்தபோது அசித்த பெர்னாண்டோவின் பந்துக்கு போல்டானார்.

விக்கெட் காப்பளர் டொம் பிளன்டல் 7 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 151 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

எனினும் நிதானமாக ஆடிய டரில் மிட்சல் ஆட்டநேர முடிவில் 40 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். அவருடன் மிச்சல் பிரேஸ்வெல் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது உள்ளார்.

இந்த ஆடுகளத்தை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் அசித்த பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு கசுன் ராஜித்த ஒரு விக்கெட்டை பதம்பார்த்தார்.

இரண்டாவம் நாள் ஆட்ட நேர முடிவுக்குப் பின்னர் பேசிய கசுன் ராஜித்த கூறியதாவது,

“நாம் நன்றாக செயற்பட்டு வருகிறோம். நாளையும் (இன்று) இவ்வாறு இருக்கும். இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவுகிறது. இதனாலேயே நாம் தேனீர் இடைவெளிக்கு முன்னரே விக்கெட்டுகளை சாய்க்க முயன்றோம். துடுப்பாட்ட வீரர்களுக்கு ஆடுகளம் சிறந்ததாக இருந்தபோதும் பெளன்சர் பந்துகளை நம்ப முடியவில்லை” என்றார்.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவின்போது நியூசிலாந்து அணிக்கு இன்னும் 5 விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில் முதல் இன்னிங்ஸில் அந்த அணி 193 ஓட்டங்களால் பின்தங்கி உள்ளது.

“முடியுமான வரை எம்மால் ஒட்டங்களை நெருங்க முடிந்தால் பந்துவீச்சில் அவர்களுக்கு (இலங்கை) நெருக்கடி கொடுக்க முடியுமாக இருக்கும். ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்படுவதை எம்மால் பார்க்க முடிகிறது” என்று டொம் லதம் குறிப்பிட்டார்.

உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற நியூசிலாந்துடனான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றும் எதிர்பார்ப்புடனேயே இலங்கை அணி ஆடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை (முதல் இன்னிங்ஸ்) – 355 (92.4) – குசல் மெண்டி 87, திமுத் கருணாரத்ன 50, அஞ்சலோ மத்தியூஸ் 47, டிம் செளதி 5/64, மட் ஹென்றி 4/80

நியூசிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 162/5 (63) – டொம் லதம் 67, டரில் மிட்சர் 40*, லஹிரு குமார 2/32, அசித்த பெர்னாண்டோ 2/42, கசுன் ராஜித்த 1/38


Add new comment

Or log in with...