சிறுமியை துன்புறுத்திய மாற்றாந்தாய் பொலிஸாரால் கைது

- வெளிநாட்டிலுள்ள தந்தை பேஸ்புக்கில் வெளியிட்ட CCTV காட்சி

பெண் ஒருவர் சிறுமியை எட்டி உதைத்து துன்புறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிய சம்பவம் தொடர்பில், தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் பெண் இன்றையதினம் (10) கைது செய்யப்பட்டுள்ளதாக ராகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான சிறுமியின் மாற்றாந்தாய் ராகமை குருகுலவ பிரதேசத்தைச் சேர்ந்த, 39 வயதுடைய கரவிட்ட ஆராச்சிலாகே தினுஷா எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான சிறுமி ராகமை போதனா வைத்தியசாலையின் 42ஆவது வார்டில் ராகமை பொலிஸ் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரியின் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிறுமியின் தந்தை வெளிநாட்டில் பணிபுரிவதாகவும், தந்தையின் இரண்டாவது மனைவியான இந்த பெண்ணுடன் சிறுமி வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை வெளிநாட்டில் இருந்தவாறு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த CCTB கெகமராவில் பதிவான சிறுமியை தாக்கும் வீடியோவை இணையத்தின் உதவியுடன் கையடக்கத் தொலைபேசியில் பார்வையிட்டு, பின்னர் அதனை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் தந்தை மற்றும் மாற்றாந்தாய் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Add new comment

Or log in with...