நிதித்துறை நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய குழு நியமிக்க அமைச்சரவை முடிவு

- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள்

அரச நிதி, கடன், மற்றும் சென்மதி நிலுவைகள் பிரச்சினைகளால் நிதித்துறைக்கு ஏற்படுகின்ற தாக்கத்தின் அடிப்படையில் நிதிநெருக்கடி ஏற்படுவதை தடுத்தல் மற்றும் அவ்வாறான நிதி நெருக்கடிகள் ஏற்படின் அதன் செலவுகளை குறைத்தல் மிகவும் முக்கியமாகும். அதற்கமைய, தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஆக்கபூர்வமான நெருக்கடி முகாமைத்துவம் மற்றும் காலத்தோடு தழுவிய தீர்மானங்களை எடுத்தல் அவசியமாகும்.

அதனால், இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சுக்கும் இடையில் நிதித்துறை நெருக்கடிக்கான தயார்படுத்தல் மற்றும் முகாமைத்துவம் தொடர்பாகவும், அவரவர் வகிபாகங்கள் தொடர்பாகவும் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்காக, நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவக் குழு மற்றும் நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவம் தொடர்பான தொழிநுட்பக் குழுவை தாபிப்பதற்கும், வங்கிகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை உட்சேர்ப்பதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. ஹொறண ஏற்றுமதிப் பதனிடல் வலயத்திற்காக (Export Processing Zone ) நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைத்தல்
இலங்கை முதலீட்டுச் சபையால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நீர்வழங்கல் உத்தேச திட்டத்தின் மூலம் ஏற்றுமதிப் பதனிடல் வலயம் மற்றும் வகவத்த கைத்தொழில் வலயத்திற்கு நீர் விநியோகிக்கப்படுவதுடன், அதன் உற்பத்திக் கொள்ளளவு நாளொன்றுக்கு 3,000 கனமீற்றர்களாகும்.

ஆயினும், ஹொறண மற்றும் வகவத்த வலயங்களில் முதலீட்டாளர்களின் நாளொன்றுக்கான நீர்த் தேவை 4,350 கனமீற்றர்களாவதால், குறித்த நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் நாளொன்றுக்கு 2,000 கனமீற்றர் கொள்ளவுடன் கூடிய புதிய நீர்ச் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேவையான நிதியொதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை முதலீட்டு சபை பணிப்பாளர் சபையால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை முதலீட்டு சபையின் நிதியொதுக்கீடுகளை செலவிட்டு, குறித்த புதிய நீர்ச் சுத்திகரிப்பு நிலையத்தை ஹொறன ஏற்றுமதி பதனிடல் வலயத்தில் நிர்மாணித்து நடைமுறைப்படுத்துவதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. 'பொதுநலவாய நாடுகளின் கற்றல்கள்' அமைப்புக்காக இலங்கையின் ஒத்துழைப்பு
'பொதுநலவாய நாடுகளின் கற்றல்' என்பது பொதுநலவாய நாடுகளின் தலைவர்களால் உறுப்பு நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்குத் தேவையான மனிதவள அபிவிருத்திக்காக, அவர்களின் இயலுமைகளைப் பலப்படுத்துவதற்காக தாபிக்கப்பட்டுள்ள சர்வதேச அமைப்பாகும்.

பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் கல்விப் பிரிவான 'பொதுநலவாய நாடுகளின் கற்றலுக்கான' உறுப்பு நாடான இலங்கை பங்களிப்பு வழங்குவது, வெளிவிவகார அமைச்சின் பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்விப் பிரிவுக்கானதாகும்.

அதற்கமைய, குறித்த பங்களிப்புத் தொகையைச் செலுத்தி 'பொதுநலவாய நாடுகளின் கற்றல்' அமைப்பின் உறுப்புரிமையை தொடர்ந்து பேணிச் செல்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. 2009 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க, வாழ்க்கைத் தொழில்சார் தற்காப்பு மற்றும் சுகாதாரத்துக்கான தேசிய நிறுவகச் சட்டத்தை திருத்தம் செய்தல்
தொழில்சார் தற்காப்பு மற்றும் சுகாதாரத்துக்கான தரநியமங்களை வகுப்பதற்காக தேசிய கொள்கையொன்றை வெளியிடுவதற்கான பணிக்கான வாழ்க்கைத் தொழில்சார் தற்காப்பு மற்றும் சுகாதாரத்துக்கான தேசிய நிறுவக்தை தாபிப்பதற்கும், தொழில்தருநர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகிய இரு தரப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற தொழிற் பாதுகாப்பு சூழலை உருவாக்கும் நோக்கில் 2009 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க, வாழ்க்கைத் தொழில்சார் தற்காப்பு மற்றும் சுகாதாரத்துக்கான தேசிய நிறுவகச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இச்சட்டம் சமகால தேவைகளுக்கமைய திருத்தம் செய்யப்பட வேண்டுமென கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, வாழ்க்கைத் தொழில்சார் தற்காப்பு மற்றும் சுகாதாரத்துக்கான தேசிய நிறுவகச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக தொழில் உறவுகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. இலங்கை கடலோரக் கண்டத்திட்டு எல்லைகளை அடையாளங் காணல்
கடல் சட்டங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சமவாயத்தின்  (United Nations convention on law of the sea)  கீழ் இலங்கையில் 200 கடல் மைல்கள் தூர விசேட பொருளாதார வலயத்திற்கு அப்பால் அமைந்துள்ள கடலோரக் கண்டத்திட்டு வெளிப்பகுதி எல்லைகளை நிறுவுவதற்காக இலங்கையானது, 2009 ஆம் ஆண்டில் தொழிநுட்ப மற்றும் விஞ்ஞானபூர்வமான தரவுகள் மற்றும் ஏனைய தகவல்கள், கடலோரக் கண்டத்திட்டுப் பகுதியின் எல்லைகள் தொடர்பான ஆணையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கமைய குறித்த ஆணையகத்தால் இலங்கையின் உரிமைக்கோரல் பற்றிக் கருத்தில் கொள்வதற்காக துணை ஆணையகம் நியமிக்கப்பட்டது. இலங்கையால் உரிமை கோரப்பட்டுள்ள கடலோரக் கண்டத்திட்டுப் பகுதி எல்லைகளைக் கண்டறிவதற்காக இத்துணை ஆணையகத்துடன் இணைந்து செயலாற்றுவற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கமைய தேசிய சமுத்திர விவகாரங்கள் தொடர்பான குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடலோரக் கண்டத்திட்டுப் பகுதியை நிறுவுவதற்காக ஆதாரபூர்வமான சாட்சியங்களுடன் அதன் வெளிப்பகுதி எல்லைகளை அடையாளங் காணும் நோக்கில் குறித்த தேசிய சமுத்திர விவகாரங்கள் குழுவை மீள்கட்டமைப்பதற்கான விருப்புக் கோரலுக்காக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயத்தின் கீழ் இலங்கையின் 6 ஆவது காலப்பகுதிக்கான மீள்நோக்கு
குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயத்தின் கீழ் இலங்கையின் 6 ஆவது காலப்பகுதிக்கான மீள்நோக்கு 2023 மார்ச் மாதம் 8 ஆம், 9 ஆம் திகதிகளில் ஜெனிவாவில் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த மீள்நோக்குக்காக வெளிவிவகார அமைச்சால் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த விடயங்கள் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...