தேர்தல் செயற்பாடுகளை தடை செய்யும் எந்த அவசியமும் அரசுக்கு கிடையாது

அரசாங்கம் தலையிடப் போவதுமில்லை - சபையில் பிரதமர்

 

தேர்தல் செயற்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டிய எத்தகைய அவசியமும் அரசாங்கத்துக்கு கிடையாதென பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் அது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கே உள்ளது. இந்நிலையில்,தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது என்றும் சபையில் தெரிவித்தார். உள்ளுராட்சி சபைத் தேர்தல் வாக்கெடுப்புக்கான புதிய திகதி அறிவிப்புக்கு 21 நாடகள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவே தீர்மானம் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதேவேளை, உள்ளுராட்சி சபைத் தேர்தல் மக்களின்  ஜனநாயக வாக்குரிமை தொடர்பில் போர்க்கொடி தூக்கும் எதிர்க்கட்சியினர், மாகாண சபைத் தேர்தலை மறந்து விட்டார்கள்.

கடந்த அரசாங்கம் மாகாண சபை திருத்த சட்டத்தை உருவாக்கி மாகாண சபைத் தேர்தலை முழுமையாக இல்லாதொழித்தது. ஆகவே மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு தற்போதைய எதிர்க்கட்சியினரே பொறுப்புக் கூற வேண்டும். இதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய 27ன் கீழ், 2 கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் பொறுப்பேற்கும் கடமையிலி ருந்து விலகுமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவிக்கும் தீர்மானம் அமைச்சரவையில் மேற்கொள்ளப்படவில்லை. வெறுமனே ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை வைத்துக் கொண்டு எதிர்கட்சித் தலைவர் தவறான தகவல்களை பாராளுமன்றத்தில் தெரிவிக்கின்றார்.

தவறான அறிவிப்பை பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அக்கணமே திருத்திக் கொண்டார் .உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் எவ்விதத்திலும் தடையேற்படுத்தவில்லை.உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவுக்கு அமைய அரச அதிகாரிகள் செயற்படுவார்கள்.

தேசிய பாதுகாப்புச் சபை கூட்டம் நேற்று கூடவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சபையில் தவறான கூற்றுக்களை வெளியிட்டார்.

அவரது கூற்று அடிப்படையற்றதாகும்.

ஜனாதிபதியின் தலைமையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை தேசிய பாதுகாப்பு சபை கூடுகிறது.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தன்மையை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் சபைக்கு தெளிவுபடுத்தினார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...