பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான் நியாசி நாடு திரும்பினார்

பாகிஸ்தான்  கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான் நியாசி நான்கு நாட்கள் கொண்ட வெற்றிகரமான விஜயத்தை மேற்கொண்டு நேற்று (28) இலங்கையிலிருந்து புறப்பட்டார்.

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அழைப்பின் பேரில் அவர் இங்கு வருகை தந்தார். அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான் நியாசியின் வருகையின் போது  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து அவருக்கு பாரம்பரிய சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இவ்விஜயத்தின் போது, இலங்கை கடற்படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்த அவர், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது, கடற்படை உறவுகளை மேலும் மேம்படுத்த பல்வேறு வழிகள் மற்றும் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுபடுத்தும் வகையில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கலந்தாலோசித்தனர்.

மேலும், அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான் நியாசி, ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவ மற்றும் விமானப்படைத் தளபதிகளை சந்தித்து  கலந்துரையாடினார். இந்தியப் பெருங்கடலின் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள இரு கடற்படைகளும் பரஸ்பர ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார். பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இலங்கை ஆயுதப்படைத் தளபதியுடனான சந்திப்பின் போது, அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான் நியாசி, இலங்கை கடற்படைக் கப்பல் அமான் 23 என்ற பன்னாட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றதற்கு தமது நன்றியினை தெரிவித்த அவர் தொடர்ந்தும்  இலங்கைக்கு ஆதரவாக நிற்பதாக உறுதியளித்தார்.

இரு தரப்பினரும் பயிற்சி ஒத்துழைப்புக்கள் மற்றும் எதிர்காலத்தில் அதை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்தனர். மேலும், அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான் நியாசி திருகோணமலை மற்றும் கிழக்கு கடற்படைப் பகுதிக்கும் விஜயம் செய்ததோடு கிழக்கு கடற்படை தளபதியை சந்தித்து கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியை பார்வையிட்டார்.

பாகிஸ்தானும் இலங்கையும் இரு சகோதர நாடுகளாகும். இராணுவத்தொடர்பு, பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் நட்புறவு ஆகியவற்றால் இலங்கை-பாகிஸ்தான் உறவு மேலும் வலுப்பெறுகிறது. அண்மையில் இலங்கை வந்திருந்த பாகிஸ்தானின் கூட்டுப் படைத் தலைவர் குழுவின் தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சாவின் விஜயத்தை தொடர்ந்து கடற்படைத் தளபதியின்  இலங்கை விஜயம் அமைந்திருந்தது.

இந்த உயர்மட்ட விஜயங்கள் குறிப்பாக 2023 பெப்ரவரி  4 அன்று கொண்டாடப்பட்ட இலங்கை சுதந்திரத்தின் 75 வது ஆண்டுடன் தொடர்புபட்ட இருதரப்பு உறவுகளின் வைர விழாவை குறிக்கும் வகையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...