தேர்தலை பிற்போடும் முயற்சி தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் கவலை

- மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்ய வாய்ப்பளிக்குமாறு அரசு, அதிகாரிகளிடம் கோரிக்கை
- தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றிற்கு அறிவிக்க தயாராகும் ஆணையாளர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது சீர்குலைக்க அரச அதிகாரிகள் மேற்கொள்ளும் சமீபத்திய முயற்சிகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அச்சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் அதன் செயலாளர் சட்டத்தரணி இசுறு பாலபட்டபெந்தி ஆகியோரின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ள 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தல், நாட்டின் சட்டத்திற்கமைய, மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டுமெனவும்,  இலங்கையின் ஜனநாயகச் செயற்பாட்டின் ஒரு பகுதியான இதற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் அல்லது பாராளுமன்றமானது தேர்தலுக்கான வளங்களை ஒதுக்குவதை தடுத்தல் மற்றும் இலங்கை மக்கள் தங்களது பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களை தெரிவு செய்வதை தடுத்தல் போன்ற தேர்தலை தடுக்கும் இத்தகைய நடவடிக்கைகள் ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் எனவும் BASL எச்சரித்துள்ளது.

எனவே அரசியலமைப்பு மற்றும் நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளித்து, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதிசெய்யுமாறு, அரசாங்கம் மற்றும் அனைத்து அரச அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுப்பதாக  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றையதினம் அறிவித்திருந்தது.

இதேவேளை, நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலை காரணமாக, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு நிதி வழங்குவது கடினமென, தேர்தல்கள் ஆணைக்குழுவை நிதியமைச்சின் செயலாளர் நேற்றையதினம் சந்தித்து உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்ததாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வாக்குச் சீட்டு அச்சிடல் உள்ளிட்ட பணிகளுக்கு போதிய நிதி வழங்கப்படாமை, தேர்தல் நடவடிக்கைகளுக்கு போதிய எரிபொருள் வழங்காமை போன்ற விடயங்கள் காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை வாக்குறுதியளித்தபடி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, உயர் நீதிமன்றிற்கு நகர்வு பத்திரம் மூலம் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

PDF icon BASL-STATEMENT-on-interfering-with-Franchise-18th-Feb-23-ENG.pdf (865.87 KB)

PDF File: 

Add new comment

Or log in with...