- வங்கிக் கடனுக்கு 28% வட்டி செலுத்த வேண்டியுள்ளதால் சிரமம்
- அரிசி ஆலை உரிமையாளர்கள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு
- குறையும் பணவீக்கத்திற்கு ஏற்ப வங்கி வட்டி வீதத்தை குறைக்க பரிசீலனை
- சிறிய மற்றும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் ஜனாதிபதி சந்திப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், தற்போது குறைந்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சிறிய மற்றும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை, மின் கட்டணம், இயந்திரப் பராமரிப்பு செலவு, போக்குவரத்து செலவு உள்ளிட்ட அனைத்து உற்பத்தி மற்றும் நிர்வாக செலவுகள் உயர்ந்துள்ளதால், அரிசியின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. தற்போதைய நெல் உற்பத்தி விலையுடன் ஒப்பிடும்போது, சந்தையில் தற்போதுள்ள அரிசி விலைக்கு தமது உற்பத்திகளை விற்பனை செய்தால் நட்டம் ஏற்படுவதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் இங்கு சுட்டிக்காட்டனர்.
அதேபோன்று, நெல் கொள்வனவு செய்ய பெற்றுக்கொண்ட வங்கிக் கடனுக்கு 28 வீத வட்டி செலுத்த வேண்டியிருப்பதனால் ஏற்படும் சிரமங்களையும் அவர்கள் முன்வைத்தனர்.
பயிர்ச் செய்கையின் போது விவசாய இடுபொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதால், நெல் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகவும், விவசாயிகள் பயிர்ச்செய்கைக்காக வங்கிகளில் பெற்ற கடனுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டியுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வாறு, விவசாயிகளின் உற்பத்திச் செலவும், அரிசி ஆலை உரிமையாளர்களின் அரிசி உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளதால், அரிசி ஆலை தொழிலை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் இதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அவதானம் செலுத்திய ஜனாதிபதி, நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கு சகல விதமான நிவாரணங்களையும் வழங்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்டார்.
விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைத்து உற்பத்தியை அதிகரிப்பதற்கும், அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வைக் காண்பதற்கும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட, அரச அதிகாரிகள், முன்னணி அரிசி ஆலை வர்த்தகர் டட்லி சிறிசேன உட்பட சிறிய மற்றும் பாரிய அரிசி உற்பத்தி ஆலைகளின் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
Add new comment