சுதந்திர தினத்தையொட்டி யாழில் இடம்பெற்ற கலாசார விழா

75 ஆவது தேசிய சுதந்திரதினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மாபெரும் இசை கச்சேரியுடன் கூடிய "நமோ நமோ தாயே கலாசார விழா" நேற்று (11) இரவு யாழ்.கோட்டைக்கு அருகிலுள்ள முற்றவெளி திறந்வெளி அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். வடமாகாண தமிழ் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் கலாசார விழாவில் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்ததோடு, இறுதியில் மாபெரும் இசை கச்சேரியும் நடைபெற்றது.

இதில் பெருந்திரளான யாழ்ப்பாண மக்கள் கலந்துகொண்டனர்.இந்த இசை நிகழ்ச்சியில் தென்னிந்திய கலைஞர்கள் பலர் கலந்து கொண்டது விசேட அம்சமாகும்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜேகலா மகேஸ்வரன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க. காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, வடமாகாண ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எம். இளங்கோவன் மற்றும் அரச அதிகாரிகள், பாதுகாப்புப் பிரதானிகள் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று (11) பிற்பகல் யாழ் கலாசார நிலைய வளாகத்தில் சுதந்திர தின ஊர்வலம் நடைபெற்றது.

இதனை கண்டகளிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட குழுவினர் வருகை தந்திருந்தனர்.

இந்த ஊர்வலத்தில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த பல்வேறு நடன அம்சங்கள் இணைக்கப்பட்டிருந்ததுடன் வடமாகாண பாடசாலை மாணவ மாணவிகளும் இதில் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.


Add new comment

Or log in with...