- இலங்கைக்கான பாகிஸ்தானின் இராணுவ உதவிகளை உயர் மட்டத்திற்கு மேம்படுத்த உறுதி
- பாதுகாப்புச் செயலாளர், விமானப்படை தளபதியை சந்திப்பு
இலங்கையின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பாகிஸ்தான் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என பாக்கிஸ்தான் கூட்டுப் படைத் தளபதிகள் குழுவின் தலைவரான ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா, NI (M) உறுதியளித்துள்ளார்.
கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு நேற்று (10) விஜயம் செய்த ஜெனரல் மிர்ஸா, இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, அண்மைய பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இலங்கை மீண்டு வருவதை ஜெனரல் மிர்ஸா பாராட்டினார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த ஜெனரல் மிர்ஸா தலைமையிலான பாகிஸ்தான் தூதுக்குழுவினர் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இரு தரப்பினர்களுக்கிடையில் பல முக்கிய விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கான இராணுவ உதவிகளை மேலும் உயர் மட்டத்திற்கு மேம்படுத்துவதற்காக பாகிஸ்தான் இராணுவத்தின் முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என பாகிஸ்தான் ஜெனரல் உறுதியளித்தார்.
மேலும், இரு பிராந்திய நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை நினைவு கூர்ந்த ஜெனரல் கமல் குணரத்ன, வலுவான இராணுவத்தை பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், கடந்த காலங்களில் பாகிஸ்தான் வழங்கிய தாராளமான ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்தார்.
இதேவேளை, பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பின் மறைவுக்கு ஜெனரல் கமல் குணரத்ன தனது இரங்கலைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, இரு அதிகாரிகளுக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தானின் ஒன்றிணைந்து போர் நடவடிக்கை மற்றும் பயிற்சி பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அப்துல் பாசித் பட், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் முஹம்மது ரஜீல் இர்ஷாத் கான் மற்றும் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மது சப்தர் கான் ஆகியோரும் பாகிஸ்தான் தூதுக்குழுவுடன் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பில், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் கலந்துக்கொண்டார்.
பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி இலங்கை விமானப்படை தளபதியை சந்திப்பு
பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஷா நேற்று (10) இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்து இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரணவை சந்தித்தார்.
பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி கொழும்பு விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுரேஷ் பெனாண்டோவின் தலைமையில் விமானப்படை வர்ண அணிவகுப்பு படைப்பிரிவின் இராணுவ மரியாதையுடன் வரவேற்கப்பட்டார் .
இதன்போது இருதரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலின்பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறப்பட்டது.
மேலும் விமானப்படை பணிப்பாளர்களையும் அவர் இதன்போது சந்தித்தார்.
பாகிஸ்தானின் பாதுகாப்பு தலைமை அதிகாரி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றுமுன்தினம் (09) இலங்கை வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment