இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு முழு ஒத்துழைப்பை பாகிஸ்தான் வழங்கும்

- இராணுவ கூட்டுப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா

பாகிஸ்தான், இலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என பாகிஸ்தான் கூட்டுப் படைத் தளபதிகள் குழுவின் தலைவரான ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா, NI (M) உறுதியளித்துள்ளார்.

இராணுவ இராஜதந்திரத்தின் மூலம் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து ஜெனரல் மிர்ஸா இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன் கலந்துரையாடினார்.

கொழும்பிலுள்ள பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி (OCDS) அலுவலகத்தில் நேற்று (09) நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ஜெனரலுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டதுடன், பாதுகாப்புப் படைகளின் பிரதான அதிகாரியின் அலுவலகத்தில் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவ விமானங்களின் சேவை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், விமான வசதியை மேம்படுத்த பாகிஸ்தான் அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.

இரு நாடுகளுக்கும் நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவுகூர்ந்த இரு உயர் பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த சந்திப்பின் போது பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினர்.

பாகிஸ்தானில் உள்ள இலங்கை இராணுவ வீரர்களுக்கு விரிவான பயிற்சி வாய்ப்புகள் மற்றும் வசதிகளை வழங்கியதற்காக பாகிஸ்தான் ஜெனரலுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவப் பயிற்சிகள் மூலம் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடினார்.

இந்த பயனுள்ள இருதரப்பு கலந்துரையாடலின் போது கப்பல் கட்டுதல் மற்றும் மற்ற வசதிகள் குறித்து இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பின் மறைவுக்கு இலங்கையின் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி தனது இரங்கலைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, ​​இரு அதிகாரிகளுக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

ஸாதிக் ஷிஹான்


Add new comment

Or log in with...