- இதன் மூலம் உரிய தரப்பினருக்கு போதிய நிவாரணம்
ஊழியர்களின் வருமானத்தில் உள்ள பணம் அல்லாத நன்மைகளை, உழைக்கும் போது செலுத்தும் (PAYE) வரியிலிருந்து விலக்களித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வாகனம், எரிபொருள், வீடுகள், மருத்துவ வசதி போன்ற பணம் அற்ற நன்மைகளை குறித்த வரியிலிருந்து விலக்களித்து குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ஏற்கனவே கடந்த 2022 டிசம்பர் 22 திகதியிடப்பட்ட முந்தைய சுற்றறிக்கை SEC/2022/E/05 இவ்வாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், குறித்த சுற்றறிக்கையில் பின்வரும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வீட்டு வசதி:
ரூ. 200,000 இற்கு குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு ரூ. 20,000 அல்லது முழுச் சம்பளத்தில் 12.5% வரி அறவிடல் மற்றும் ரூ. 200,000 இற்கு அதிக வருமானம் பெறுவோருக்கு ரூ. 40,000 அல்லது முழுச் சம்பளத்தில் 12.5% என கணிக்கப்பட்ட பிரதிபலன், அடிப்படைச் சம்பளத்தில் 12.5% வரி என திருத்தப்பட்டுள்ளது.
வீட்டு உபகரணங்களுக்கு ரூ. 5,000 அல்லது 2.5% பிரதிபலன் என்பது சுற்றறிக்கையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
வாகனம்:
1800 CC இற்கு குறைந்த மற்றும் அதற்கு அதிக வாகனங்களுக்கு முறையே ரூ. 50,000 மற்றும் ரூ. 75,000 என விதிக்கப்பட்ட வரி, வாகனத்திற்கு ரூ. 20,000, சாரதிக்கு ரூ. 10,000 எரிபொருளுக்கு ரூ. 20,000 என மாற்றப்பட்டுள்ளது.
எரிபொருள் கொடுப்பனவு 100% வரிக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அது 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இது தவிர, துறைசார் கடமைகளுக்கு வழங்கப்பட்ட வாகனங்களை தனிப்பட்ட பயன்பாட்டுக்கு பயன்படுத்தும்போது கி.மீற்றருக்கு ரூ. 25 என விதிக்கப்பட்ட பிரதிபலன், கி.மீ. இற்கு ரூ. 25 அல்லது சாரதியுடன் ரூ. 20,000 மற்றும் சாரதியுடன் ரூ. 30,000 எனும் இரண்டில் எது குறைவானதை தெரிவு செய்தல்.
தொலைபேசி:
100% வரிக்குட்படுத்தப்பட்ட தொலைபேசி கொடுப்பனவு பிரதிபலன் 25% ஆக திருத்தப்பட்டுள்ளது.
சலுகைக் கடன் வட்டி:
சேவை வழங்குனரால் வழங்கப்படும் சலுகைக் கடன் வட்டியுடன் வழங்கப்பட்ட கடனுக்கான வட்டி பிரதிபலன் ஆனது வரிக்காக கணக்கிடப்படாது.
குறித்த திருத்தங்கள் மூலம் குறிப்பிடும்படியான நிவாரணங்கள் உரிய தரப்பினருக்கு கிடைத்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பெப்ரவரி 07 திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள SEC/2022/E/05 திருத்தப்பட்ட சுற்றறிக்கை மற்றும் அமைச்சரின் ஊடக அறிக்கை வருமாறு...
SEC_2022_E_05(Rev).pdf (2.39 MB)
2023_02_08.pdf (476.37 KB)
Add new comment