தினகரன் SMS Alert சேவை (செயற்படுத்த REG இடைவெளி TKN என REG TKN டைப் செய்து 77010 இற்கு SMS செய்யுங்கள்
தினகரன் SMS Alert
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வை இன்று (2023-02-08) ஆரம்பித்து வைத்து
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தின் சுருக்கம்
1. இந்த மாணவ மாணவிகள், இந்த இளைஞர் யுவதிகள் எமது நாட்டின் எதிர்கால சந்ததியினர் ஆவார்கள். நாட்டை விட்டுச் செல்லாது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பிரார்த்தனை செய்யும் எதிர்கால சந்ததியினர் ஆவார்கள். அவர்களுக்கு சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவது எமது அனைவரதும் பொறுப்பாகும். இந்த சபையில் உள்ள உங்களுடைய பொறுப்பும் அதுவாகும். அனைத்து இலங்கையர்லதும் பொறுப்பு அதுவாகும்.
2. அபாயகரமான தொங்கு பாலத்தில் இலங்கைத் தாயை வெகுதூரம் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு எம்மால் முடிந்துள்ளது. நாம் அவ்வாறு பயணித்த பாதை இலகுவானது அல்ல. ஆனாலும் பயணம் இன்னமும் முடிவடையவில்லை.
3.வீழ்வதற்கு நெருங்கியிருந்து அரச நிதி முறைமையைப் பாதுகாப்பதற்கு நாம் அர்ப்பணித்தோம். அரச செலவினங்களை மட்டுப்படுத்தினோம். வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம்.
4. கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் காரணமாக வரி வருமானம் வீழ்ச்சியடைந்ததனை நாம் அறிவோம். 2019 டிசம்பர் 31 ஆம் திகதியளவில் தொழில்முயற்சிகள், கம்பனிகள் மற்றும் தனிநபர்கள் 16 இலட்சம் பேர்கள் வரி செலுத்தினார்கள். 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் வரி செலுத்தும் எண்ணிக்கையினர் 5 இலட்சம் பேர் வரை வரை வீழ்ச்சியடைந்தது. அரசின் வரி வருமானம் படுமோசமாக வீழ்ச்சியடைந்தது.
5. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு விளையும் அழிவினைப் புரிந்து கொண்ட பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மீண்டும் 2019 ஆம் ஆண்டு காணப்பட்ட வரி முறைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
6. நினைவிற்கொள்ளுங்கள். எனக்குத் தேவை பிரபல்யமடைவதற்கு அல்ல. எனக்குத் தேவை இந்த நாடு அடைந்துள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீளக்கட்டியெழுப்புவதற்கு ஆகும். ஆம். நான் நாட்டுக்கான பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுப்பேன். அத்தகைய தீர்மானங்களின் முக்கியத்துவத்தை இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் பெரும்பாலானோர் புரிந்துகொள்வார்கள்.
7. வரி செலுத்த வேண்டிய வருமான எல்லையினை ஒரு இலட்சம் ரூபாவிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்க வேண்டுமென சிலர் கூறுகின்றார்கள். உழைக்கும் போதே வரி செலுத்தும் முறையை நீக்க வேண்டுமென மற்றும் சிலர் கூறுகிறார்கள். நாம் விருப்பத்துடன் இந்த வரிகளை விதிக்கவில்லை. ஆனாலும் எமக்கு விருப்பமானவற்றை செய்தவுடன் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. விரும்பாவிட்டாலும் சரியானதைச் செய்ய வேண்டும்.
8. உழைக்கும் போதே செலுத்தும் வரியை நீக்கினால் நாடு 100 பில்லியன் ரூபாவை இழக்கும். வரி எல்லையை இரண்டு இலட்சம் வரை அதிகரித்தால் நாடு 63 பில்லியன் ரூபாவை இழக்கும். இழக்கப்படும் மொத்த தொகை 163 பில்லியன் ரூபாவாகும். இவ்வளவு பாரியதொரு தொகையை இழக்கும் நிலையில் நாம் இல்லை.
9. தற்போது எமது நாட்டில் கூடுதான அளவு வரியினை பொதுமக்களே செலுத்துகின்றார்கள். நேரடியாக வரி செலுத்த வேண்டிய நபர்களிடம் மற்றும் நிறுவனங்களிடம் உரிய முறையில் வரி அறவிடப்படாமை காரணமாக அனைத்து இலங்கையர்களும் மறைமுக வரியாக பெருந்தொகைப் பணத்தை செலுத்துகின்றார்கள். வரி செலுத்துவதற்கு தேவை அற்ற பாரியளவு எண்ணிக்கையினர் தம்மை அறியாமலேயே வரி செலுத்துகின்றார்கள்.
10. 2021 ல் எமது நாட்டின் நேரடி வரி 21 சதவீதம். மறைமுக வரி 79 சதவீதம். ஆகவே இந்த வரி முரண்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக நாம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அப்போது ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமை குறைவடையும்.
11. இவ்வாறு முன்னோக்கிச் சென்றால் ஆண்டின் மூன்றாவது நான்காவது காலாண்டுகளில் அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவினை செலுத்துவதற்கு எம்மால் முடியும்.
12. தனியார் துறைக்கு சலுகைகளை வழங்க முடியும். முழு நாட்டு மக்களதும் கைகளை இன்று உள்ளதை விடவும் வளமாக்க முடியும். தொழில் மூலமான வருமான மார்க்கத்தை அதிகரிக்க முடியும். வங்கி வட்டிவீதத்தைக் குறைக்க முடியும். மேலும் சுமார் மூன்று ஆண்டுகள் செல்லும் போது இன்று ஈட்டும் வருமானத்தை விட சுமார் 75 சதவீத வருமானத்தைப் பெற முடியும்.
13. தற்போது அனைத்து கஷ்டங்களுக்கும் மத்தியில் நலிவுற்ற பொருளாதாரம் காரணமாக அவதியுறும் வறுமையில் வாடும் குழுக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டோம். இதற்காக உலக வங்கி எமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியது.
14. எமது நாட்டில் நிவாரண உதவிகள் வழங்கும் முறை உருச்சிதைவுற்றுக் காணப்படுகிறது. அதிக வருமானம் உழைக்கும் நபர்கள் கூட நிவாரண உதவிகளைப் பெறுகின்றார்கள். நாம் இந்த நிலைமையினை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். உண்மையான வறுமை சமூகத்தை நாம் அடையாளம் காண்கின்றோம். நிவாரண வங்கிக் கணக்கின் ஊடாக அவர்களுக்கு நேரடியாக பணம் செலுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை நாம் தயாரித்த வருகின்றோம்.
15. நான் ஒரு போதும் செய்ய முடியாதவற்றைக் கூற மாட்டேன். அதிகாரத்துக்காக பொய் கூற மாட்டேன். வரவு செலவுத்திட்ட உரையின் போதும் பாராளுமன்றத்தை திறந்துவைக்கும் போதும் நான் கூறிய அனைத்தையும் நடைமுறைப்படுத்தி வருகின்றேன். அதன் மூலம் பொருளாதாரத்தில் ஓரளவு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு எம்மால் முடிந்துள்ளது.
16. மறைப் பொருளாதாரத்தில் இருந்து நேர்மறைப் பொருளாதாரத்தை நோக்கி நாம் தற்போது பயணம் செய்து வருகின்றோம். 2023 ஆம் ஆண்டு இறுதியளவில் நேர்மறைப் பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொள்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.
17. நான் சனாதிபதியாக ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது நாட்டின் பணவீக்கம் 70% ஆகும். எமது செயற்பாடுகள் காரணமாக 20203 சனவரி மாதமளவில் அதனை 54% சதவீதமாக குறைப்பதற்கு எம்மால் முடிந்தது. 2023 ஆம் ஆண்டு சனவரி மாதமளவில் அதனை 54 சதவீதம் குறைப்பதற்கு எம்மால் முடிந்தது. அதனை தனி இலக்கத்திற்கு கொண்டு வருவதற்கு நாம் பாகின்றோம்.
18. வெளிநாடுகளில் தொழில் புரியும் நபர்கள் இந்த இக்கட்டான நிலையில் தாய் நாட்டுக்கு உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை வழங்குகிறார்கள். 2022 ஆம் ஆண்டு இறுதியளவில் 4 பில்லியன் டொலர் வெளிநாட்டு அந்நிய செலாவணியை அவர்கள் எமக்கு வழங்கினார்கள்.
19. எமது தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள், அவர்களுக்கு பல்வேறு வகையான அழுத்தங்களைப் பிரயோகித்த ஒரு பின்னணியிலேயே இந்த அர்ப்பணிப்பினை நாட்டுக்காக மேற்கொண்டார்கள். ஆனாலும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் இலங்கைக்கு பணம் அனுப்புவது நாட்டுக்காக அன்றி அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிக்காக அல்ல என்பதனை அவர்கள் நிரூபித்துள்ளார்கள்.
20. பெரும்பாலும் பூச்சியத்துக்கு வீழ்ந்த எமது அந்நிய செலாவணி ஒதுக்கினை 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பதற்கு எமக்கு தற்பொழுது முடிந்துள்ளது.
21. சுற்றுலாக் கைத்தொழிலை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு எம்மால் முடிந்துள்ளது. வீதிகள் முழுவதும் குறுகிய அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட தடைகளுக்கு மத்தியில் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்தார்கள். உலகின் சிறந்த 10 சுற்றுலா இடங்களில் இலங்கையும் பெயரிடப்பட்டது. இந்த சனவரி மாதத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளார்கள். அது ஒரு சாதனையான எண்ணிக்கையினர் ஆகும்.
22. நாம் பயணிக்கும் இந்த திட்டத்தின் பிரகாரம் முன்னோக்கிச் சென்றால் 2026 ஆம் ஆண்டளவில் வங்கரோத்து நிலையிலிருந்து எமக்கு மீளுவதற்கு முடியும். நான் தொடர்ந்தும் கேட்டுக் கொண்டவாறு நாட்டைக் கட்டியெழுப்பும் போராட்டத்துக்கு இந்த பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தால், எமக்கு அதற்கு முன்னர் இந்த நெருக்கடியில் இருந்து மீளுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.
23. 2020 ஆம் ஆண்டு நாம் ஐஎம்எப் அமைப்பில் இருந்து விலகினோம். அவ்வாறான தொலைநோக்கற்ற தீர்மானங்கள் தற்போதைய நிலைமைக்கு காரணமாய் அமைந்துள்ளது. பங்களாதேஷ் தொடர்ந்தும் ஐஎம்எப் அமைப்புடன் இணைந்திருந்த காரணத்தால் அவர்களுக்கு அந்த அமைப்பில் இருந்து வேகமாக நிவாரணங்களை பெற முடிந்தது. எமக்கு அனைத்து தொடர்புகளையும் ஆரம்பத்திலிருந்து மீண்டும் ஆரம்பிப்பதற்கு நேர்ந்தது.
24. கடன் மறுசீரமைப்புக்காக எமக்கு கடன் வழங்கியவர்களுடன் நாம் கலந்துரையாடி வருகிறோம். அதுமட்டுமின்றி, சர்வதேச நாணய நிதியம் மட்டுமே ஆதரவைப் பெறக்கூடிய ஒரே தரப்பாகும். அவர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு அடித்தளத்தின் அடிப்படையில் மட்டுமே நாம் முன்னேற முடியும். அதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. வேறு ஏதேனும் மாற்று வழி இருந்தால் விமர்சிக்கும் அரசியல் கட்சிகளிடம் இந்த சபையில் அதனை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
25. சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் இறுதிக்கட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். கடந்த செப்டம்பரில் ஒரு அடிப்படை உடன்பாட்டை எட்ட முடிந்தது. இப்போது இருப்பது கடன் ஒருங்கிணைப்பு திட்டம் மட்டுமே ஆகும்.
26. நமது கடனை மறுசீரமைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது மற்றும் நிதி உத்தரவாதமும் அளித்துள்ளது.
27. ஐ.எம்.எப் அமைப்புடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கும் கடன் மறுசீரமைப்பிற்கும் தனது அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக பாரிஸ் கிளப் நேற்று அறிவித்தது. அந்த அறிவிப்பின் மூலம், பாரிஸ் கிளப்பின் நிதி உத்தரவாதத்தையும் பெறுகிறோம்.
28. நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை சர்வதேச ஆதரவு எடுத்துக் காட்டுகிறது. மக்கள் அழுத்தம் குறைந்துள்ளதும் நாம் செல்லும் வழி சரியானது என்பதை நிரூபிக்கிறது.
29. பெரும்போக அறுவடை அதிகரிக்குமென எதிர்கூறப்பட்டுள்ளது. இம்முறை அறுவடைகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 20 பில்லியன் ரூபாய் பெறுமதியான நெல் அறுவடைகளை அரிசியாக மாற்றி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதாந்தம் 10 கிலோ வீதம் இரண்டு சந்தர்ப்பங்களில் இலவசமாக வழங்கப்படும்.
30. இன்று இலங்கை பொருளாதார ரீதியாக ஒரு கவலைக்கிடமான நோயாளியாக உள்ளது. உடனடியாக நோயை இனம் கண்டு அதற்குத் தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனாலும் சிலர் இதுவரை சிகிச்சை வழங்கிய வைத்தியர்களின் குறைகளை கூறி வருகின்றார்கள். அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென அவர்கள் கூறுகின்றார்கள். ஆனாலும் ஆரம்பத்தில் நோயாளியை குணப்படுத்துவதற்கு நான் முயற்சி செய்து வருகின்றேன்.
31. ஊழல்களைத் தடுக்கும் சட்டத்தைக் கொண்டுவருவோம். ஐஎம்எப் அமைப்புடன் ஏற்படுத்திய இணக்கப்பாட்டுக்கு அமைய உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து ‘திருடப்பட்ட சொத்துக்களை மீண்டும் கண்டறியும் முயற்சியை’ இச் சட்டத்தில் உள்ளடக்குவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.
32. ஐஎம்எப் அமைப்பின் இணக்கப்பாடு கிடைக்கப்பெற்ற பின்னர் எமக்கு பொருளாதாரத்தை ஓரளவு ஸ்திரத் தன்மைக்கு கொண்டு வர முடியும். ஆயினும் நோயை முற்று முழுதாக குணப்படுத்த வேண்டுமாயின் எமக்கு முன்னோக்கிய சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
33. ஐஎம்எம் அமைப்பின் உறுதிப்பாடு கிடைக்கப்பெற்றவுடன் உலக வங்கி, ஆசியா அபிவிருத்தி வங்கி போன்ற ஏனைய சர்வதேச நிறுவனங்களிடம் கடனுதவிகள் பெறல் தொடர்பில் எதிர்பார்ப்பு ஏற்படுதிக்கொள்ள முடியும். அதன் போது முதலீட்டாளர்களின் நம்பிக்கை உறுதி செய்யப்படும். அதன் காரணமாக அந்நிய செலாவணி நாட்டுக்கு பாய்ச்சப்படும் போக்கு ஏற்படும். நாம் அந்த உதவிகளை உரிய முகாமைத்துவத்துடன் நாட்டின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்துதல் வேண்டும்.
34. நீண்டகாலமாக குறுகிய அரசியல் தேவைப்பாடுகளுக்காக பொருளாதார மறுசீரமைப்புக்களை நாம் தாமதப்படுத்தினோம். நட்டம் உழைக்கும் அரச நிறுவனங்களின் சுமைகளை மக்கள் மீது சுமத்தினோம். கடந்த ஆண்டு தொழில் முயற்சிகளை மேற்கொள்ளும் அரச நிறுவனங்களின் நட்டம் 800 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகும். அந்த முழு நட்டத்தையும் மக்கள் செலுத்துகின்றார்கள். பல்லாண்டு காலமாக மக்கள் அந்த நட்டத்தை செலுத்தி வருகின்றார்கள். ஆனாலும் பெரும்பாலானவர்கள் தாம் இவ்வாறு நட்டம் உழைக்கும் அரச நிறுவனங்களின் சுமைகளைச் சுமப்பதை அறியவில்லை. மிகவும் அப்பாவி ஏழைக்கும் இந்த நிறுவனங்களை பராமரிப்பதற்கு செலவுசெய்ய வேண்டியுள்ளது.
35. நாம் உடனடியாக பொருளாதார மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்ட தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் இன்று நாளுக்கு நாள் முன்னோக்கி செல்கின்றது. அவ்வாறு இல்லாதுவிடின் எமக்கு பின்னோக்கிச் செல்ல நேரிடும்.
36. அரச நிலங்கள், கட்டடங்கள் எந்த விதமான பயனுள்ள விடயங்களுக்கும் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படும் இடங்கள் ஏராளம். பயனுள்ள வேலைக்கு அவற்றைப் பயன்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம்.
37. குறிப்பாக அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான விளை நிலங்கள் பலவும் காடுகளாகப் போய்விட்டன. பயிரிடப்படாத நெல் வயல்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் உள்ளன. அவை அனைத்தையும் விவசாயத்திற்கு திறம்பட பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
38. கடன்களை அடிப்படையாகக் கொண்ட கருத்திட்டங்கள் மதிப்பீட்டுச் செயன்முறையின் அடிப்படையில் மாத்திரம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும். அரசியல் காரணங்களுக்காக அரச முதலீடுகளை வழிநடாத்தும் முறையினை இடைநிறுத்துதல் அத்தியாவசியமான ஒரு விடயமாகும்.
39. வங்கிகள் மீண்டும் பலமடைந்துள்ளன.
40. உற்பத்தியை அதிகரித்தல், பொருட்கள் சேவைகளை வழங்குதல், கைத்தொழில் மற்றும் விவசாய நவீனமயப்படுத்தலுக்காக உயர்ந்தபட்ச தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.
41. தற்போது நாட்டின் வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.15 சதவீதமாக உள்ளது. இதை 15 சதவீதமாக உயர்த்துவது எங்கள் எதிர்பார்ப்பாகும்
42. நினைவில் கொள்ளவும். நாம் இன்று ஒரு பொருளாதார யுத்தத்தை எதிர்நோக்கி உள்ளோம். இந்த யுத்தம் வடக்கு கிழக்கு யுத்தத்தை விட ஒரு தீர்க்கமான யுத்தமாகும். வடக்கு கிழக்கு மோதலில் இனங்கள் பிளவுபட்டன. ஆயினும் இந்த யுத்தத்தில் அனைத்து இனங்களும் ஒன்றாக இணைந்து போராட வேண்டியுள்ளது.
43. பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வழி விடுவோமாயின் இப்பொருளாதார யுத்தத்தில் நாம் தோல்வியடைவோம். அவ்வாறு இடம்பெறுமாயின் சில அரசியல் கட்சிகள் கூறுவது போன்றதொரு கற்பனை உலகம் எமக்கு உரித்தாகாது. நாம் பொருளாதார காலணித்துவத்திற்கு உட்படுவோம்
44. திரு ஆர் சம்பந்தன் அவர்களும் நானும் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டோம். நாம் இருவருக்கும் பொதுவான ஒரு கனவு உண்டு. நாம் இருவரும் பாராளுமன்றத்தில் இருக்கின்ற போதே இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிலைபேறான ஒரு தீர்வை வழங்குதல் ஆகும்.
45. வடக்கு கிழக்கு யுத்தம் முழு நாட்டையும் பாதித்தது. முழுமையான வடக்கு மாகாணமும் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல பிரதேசங்கள் யுத்தம் காரணமாக பாரிய துன்பங்களை அனுபவித்தது. இப்பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பாக கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு செயற்படுவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். அப்பிரதேசங்களுக்கான விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவோம்.
46. யாழ் மாவட்டத்தில் பாதுகாப்பு படை முகாங்கள் உட்பட அரசின் கீழ் 3300 ஏக்கர் காணிகள் உள்ளன. பலாலி முகாமுக்காக கையேற்கப்பட்டுள்ள 100 ஏக்கர் காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டன. மேலும் பல ஏக்கர் காணிகள் தொடர்பாக தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. அது தொடர்பாக இராணுவம் மற்றும் ஏனைய தரப்பினர்களுடன் கலந்துரையாடப்படுகிறது.
47. தமக்கு உரித்தான பல காணித் துண்டுகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால் மக்களுக்கு பாரியளவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளன. மொனராகலை தொடக்கம் யாழ்ப்பாணம் வரை மக்கள் இப்பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார்கள். இந்த அநீதியை சீர்செய்ய நாம் நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
48. காணாமல் போன நபர்கள் தொடர்பாக கண்டறிவதற்கான முறைமையினை நாம் முறைமைப்படுத்தி துரிதப்படுத்துவோம்.
49. பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் சிறைவைக்கப்பட்டுள்ள நபர்கள் பற்றியும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். பல ஆண்டுகளாக அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். படிப்படியாக இந்த சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.
50. தேசிய காணி சபை ஒன்றை தாபிப்பதற்கான வரைவு தயாரிக்கப்படும். தேசிய காணிக்கொள்கை வரைவு தயாரிக்கப்படும்.
51) கல்வித் துறையில் மாகாண அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாம் புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கின்றோம்..
52) அதிகாரப் பகிர்வு செயன்முறையினை முறையாக மற்றும் உரியவாறு நடைமுறைப்படுத்துவதற்காக சட்டங்களைத் திருத்த வரைவுகள் தயாரிக்கப்படும்.
53) மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்துக்கு இடையில் ஒருங்கிணைப்பு பணிகளை முறைமைப்படுத்துவதற்காக நவீன முறையில் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை
54) மாகாணங்களின் பிரகாரம் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவு எல்லைகளை நிர்ணயிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவித மாற்றங்களும் இடம் பெறமாட்டாது.
55) மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனித உரிமை சட்டத்தை பாரதூரமான முறையில் மீறுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக உயர்நீதிமன்ற நீதியரசர் திரு ஏ எச் எம் டீ நவாஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட சனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் கவனம் செலுத்துவோம்.
56) வடக்கின் அபிவிருத்திக்காக புறம்பான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.
57) கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆறு மற்றும் நீர் முகாமைத்துவம் செய்தல், வடமராட்சி குளத்தை மறுசீரமைத்தல் , குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு நீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
58) மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மூலம் இப் பிரதேசங்களின் மின்சாரத் தேவைப்பாட்டை நிறைவு செய்வதற்காக பயன்படுத்தப்படும்.
59) சுற்றுலாக் கைத்தொழிலுக்காக கூடுதல் வய்ப்பு வழங்கப்படும். முலீட்டு வலயங்கள் அமைக்கப்படும். விவசாய நடவடிக்கைகளை நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் வழங்கப்படும்.
60) காங்கேசந்துறை துறைமுகம் நவீனமயப்படுத்தப்படும். விரிவாக்கப்படும்.
61) திருகோணமலை நவீன சர்வதேச நகரமாக அபிவிருத்தி செய்யப்படும்.
62) மோதல்களுக்கு அகப்பட்டு பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின்னடைந்த கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்காக விசேட விவசாயத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.
63) பெருந்தோட்ட மக்கள் தொடர்பாகவும் நாம் விசேட கவனம் செலுத்துவோம். இலங்கையின் பெருந்தோட்ட கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்காக தம்மை அர்ப்பணிக்கும் அவர்களை நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை மக்களின் ஒரு பிரிவினராக மாற்றப்பட வேண்டும்.
64) அடிக்கடி முஸ்லிம் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதனை நாம் அறிவோம். அது தொடர்பாகவும் நாம் முழு அவதானம் செலுத்துகின்றோம்..
65) சாதி வேறுபாடுகள் காரணமாக சமூகத்தில் ஓரம் கட்டப்பட்டள்ள சமூகங்கள் தொடர்பில் முழு அவதானம் செலுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.
66) ஒற்றையாட்சி அரசில் உயர்ந்தபட்ச அதிகாரத்தைப் பகிர்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். ஆனாலும் நாட்டைப் பிரிப்பதற்கு அல்லது பிரிப்பதற்கு துணை போகும் எந்தவொரு நடவடிக்கையினையும் நாம் மேற்கொள்ள மாட்டோம்.
67) மக்கள் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் நாம் ஜன சபைச் சட்டத்தை சட்டமாக்குவோம்.
68) இதுவரை நாம் பின்பற்றிய சம்பிரதாய அரசியல் தொடர்ந்தும் செல்லுபடியாகாது. அரசியல் நன்மைகளுக்காக போலியான மற்றும் மூடநம்பிக்கையின் மூலம் மேற்கொண்ட ஏமாற்றுதல்கள் எதிர்காலத்துக்கு பொருந்தாது.
69) முறைமை மாற்றம் தொடர்பாக பேசுகின்ற ஒருசில அரசியல் கட்சிகள் தன்னைத் தவிர ஏனைய நபர்களை மாற்றுமாறு யோசனை தெரிவிக்கின்றார்கள். இதுவும் சம்பிரதாய அரசியலில் ஒரு பகுதியாகும்.
70) மாற்றத்தை எம்மில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
71) பாராளுமன்ற மேற்பார்வை செயற்குழுக்கு இளைஞர் பிரதிநிதிகள் நியமிக்கப்படவில்லை. அதனைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு நான் பாராளுமன்றத்தை வினவுகின்றேன். மேற்பார்வை செயற்குழுக்கள் மூலம் உயர்ந்தபட்ச பயனை அடைந்துகொள்வதற்கான மனமாற்றத்தை ஏற்படுத்துவது இந்த சபையில் உள்ள உங்கள் அனைவரதும் பொறுப்பாகும்.
72) பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசாங்கத்தின் செயலூக்கமான பங்காளர்களாக மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.
73) முழுமையான சுயாதீனமுள்ள பாராளுமன்ற வரவுசெலவு அலுவலகம் ஒன்று தாபிக்கப்படும்.
74) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கவிழுமியம் மற்றும் பாராளுமன்றத்தின் தரம் தொடர்பான ஒரு சட்டமூலம் தயாரிக்கப்படும்.
75) தேர்தல் முறை குறித்து ஆராய தெரிவுக்குழு. புதிய தேர்தல் முறையில் புத்திஜீவிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு போதிய வாய்ப்பு.
76) இலங்கையின் அரசியல் கட்சிகள் மற்றும் அவை செயற்பட வேண்டிய முறை பற்றிக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக சனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்தல்.
77) எதிர்காலத்தை மிகவும் சிறந்ததாக மாற்றியமைப்பதற்காக புதிய நிறுவனங்கள், புதிய சட்டவிதிகள் மற்றும் பல புதிய கருத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
78) ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச தரத்தில் பயிற்சி வழங்குவதற்காக ஊடக நிறுவனம் முதல் பல்கலைக்கழகம் வரையிலான நிறுவன முறைமை ஒன்றை தாபித்தல்.
79) எதிர்வரும் 25 ஆண்டுகளுக்குள் நாம் பின்பற்ற வேண்டிய கொள்கைகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான முன்மொழிவுகளை முன்வைக்குமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றேன். நீங்கள் இலங்கையில் இருந்தாலும், வெளிநாடுகளில் இருந்தாலும் உங்களது கருத்துக்களை முன்வைக்கவும். நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணையுங்கள்.
80) அனைத்து தரப்பினர்களும் ஒன்றாக இணைதல் வேண்டும். குறிப்பிட்ட சில காலம் ஒரே நோக்கத்தில் ஒரே கொள்கையினை நடைமுறைப்படுத்துவதற்கான முடிவுகள் எட்டப்படல் வேண்டும். சமூக இணக்கப்பாடு ஏற்படுத்தப்படல் வேண்டும். நாட்டுக்காக நம் அனைவரதும் வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்தல் வேண்டும்.
81) சமூக நீதிக்கான ஆணைக்குழுவை தாபிக்க எதிர்பார்க்கின்றோம். எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான புதிய கொள்கைச் சட்டகத்தை இந்த சமூக இணக்கப்பாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்குவோம்.
82) எமது தாய்நாட்டை பொருளாதார அல்லது சமூக காலனித்துவமாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. அராஜக நிலைக்கு இட்டுச்செல்ல இடமளிக்க முடியாது. நாட்டை உண்மையாக நேசிக்கும் எந்தவொரு நபரும் அதற்கு இடமளிக்க மாட்டார்கள். நாம் அனைவரும் நாட்டை நேசிக்கும் தரப்பில் இருக்க வேண்டுமே தவிர நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச்செல்லும் தரப்புடன் அல்ல.
83) இறந்தகால சிறைக் கைதிகளாக இல்லாமல் நாம் எதிர்காலம் பற்றிச் சிந்திப்போம். நாம் ஒன்றாக இணைவோம். பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருவோம். சனநாயக கருத்துக்கள் ஊடாக முன்னோக்கிச் செல்வோம். நாடு அடைந்துள்ள கவலைக்கிடமான நிலையில் இருந்து மீட்டெடுப்பதற்கு உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை வழங்குவோம். அரசியல் நோக்கங்கள் பற்றி சிந்திக்க வேண்டுமாயின் நாட்டை இந்த நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்த பின்னர் அது பற்றி சிந்திப்போம்.
Add new comment