வயல் வாடிக்குள் தந்தை, 6, 9 வயது பிள்ளைகள் சடலங்களாக மீட்பு

படங்கள்: சமன் விஜய பண்டார

- நள்ளிரவு அழைத்து மோட்டார் சைக்கிளில் பழுது என தெரிவித்தார்: மாமனார்

அரநாயக்க, பொல்அம்பேகொட பகுதியில் 33 வயதான தந்தையும் அவரது 6 வயது மகன் மற்றும் 9 வயது மகளும் இன்று (06) அதிகாலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் அரநாயக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அரநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்அம்பேகொட, கொதிகமுவ வயல்வாடி ஒன்றில் இவர்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். நள்ளிரவில் அல்லது இன்று அதிகாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த வீதியிலிருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் குழந்தைகளின் தாயின் வீடு உள்ளதோடு, குறித்த தந்தை வயல்வாடியின் வளையில் தூக்கில் தொங்கிய நிலையிலும் இரண்டு பிள்ளைகளும்  இருவரும் நிலத்தில் அருகருகே கைகளை இணைத்து வைத்த நிலையிலும் காணப்படுவதோடு, தந்தை தூக்கில் தொங்கிய கயிற்றின் அருகே மேலும் இரண்டு கயிறுகளும் காணப்படுகின்றன.

இறந்த மகளின் கால் அருகே ஒரு கயிறு காணப்படுவதோடு, குழந்தைகளின் காலணிகளும் தந்தையின் காலணிகளும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்ததோடு, குறித்த இடத்தில் கையடக்கத் தொலைபேசி ஒன்று கொன்கிரீட் இருக்கையில் இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.

சம்பவம் தொடர்பான தகவல் அரநாயக்க பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அரநாயக்க பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ராகுல கந்தேவத்த உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரதேசவாசிகள் மற்றும் உறவினர்களிடம் சாட்சியங்களை பதிவு செய்தனர்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குழந்தைகளின் தாயின் தந்தையான 61 வயதான நிமல் விமலசூரிய,

இது என் மருமகனும் எனது மகளின் இரண்டு பிள்ளைகளும். மருமகனின் தாய் வீடு கிரிஉல்லே.இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரநாயக்க கொடிகமுவவிலுள்ள எமது வீட்டிலிருந்து பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்று வந்தனர். மருமகன் பிள்ளைகளை பாடசாலையில் இருந்து விலக்கி மகளுடன் கிரிஉல்லாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு, எனது மகள் எங்களை அழைத்து வாளை எடுத்துக் கொண்டு என்னை கொல்ல துரத்தி வருவதாக கூறினார். எனது மகளின் பேச்சைக் கேட்டதும் முச்சக்கரவண்டியை எடுத்துக்கொண்டு கொடிகமுவ வீட்டிற்கு அழைத்து வந்தோம். இது தொடர்பில் கடந்த 05ஆம் திகதி காலை அரநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாடு மனு மீதான விசாரணை இன்று (06) காலை 10.00 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. நேற்று (05) மாலை மருமகனும் இரண்டு பிள்ளைகளும் சைக்கிளில் கொடிகமுவவில் உள்ள எங்கள் வீட்டுக்கு வந்தனர்.

குழந்தைகள் வந்து சாப்பாட்டை உண்டு விட்டு ஐஸ் வேண்டுமென்று சொனார்கள். குளிர்சாதனப் பெட்டியில் இருந்து அதனை எடுத்து கொடுத்தேன். மாலையில் மருமகன் இரண்டு குழந்தைகளுடன் செல்ல ஆயத்தமானார். நான் குழந்தைகளை இப்போது அழைத்துச்  செல்ல வேண்டாமென நான் கூறினேன். நாளையும் மீண்டும் வரவேண்டும். குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பவும் வேண்டுமென சொன்னார். அதனால் நான் கட்டாயப்படுத்தவில்லை. அதன்படி, பி.ப. 5.00 மணியளவில் பிள்ளைகளுடன் புறப்பட்டுச் சென்றார். நள்ளிரவு 12.15 மணியளவில் எனது மருமகனிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.

சைக்கிளின் ரேசர் போய்விட்டது, பைசிக்களை விட்டு, நடந்துதான் செல்கின்றோம் என மருமகன் கூறினார். நடந்து போனாலும் பரவாயில்லை, பிள்ளைகளுக்கு தூக்கமாகை இருக்கும். குழந்தைகளை கவனமாக அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னதோடு, காலையில் வரவும் சொன்னேன். காலைக்குள் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அவர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் அங்கு வந்த தேரர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இதைப் பார்க்கும்போது, மிகவும் உணர்ச்சிவசமாக உள்ளது. ஒரு பிரச்சினை என்றால் பேசித் தீர்த்திருக்க வேண்டும். ஆனால் அப்பாவி குழந்தைகளை பலிவாங்கி, அனைவரது உயிரையும் பறிக்காமல், குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்தித்திருக்க வேண்டும். திடீர் முடிவுகளால் ஏற்படும் இவ்வாறான கொலைக்கு அப்பாவி குழந்தைகளை பலியாக்குவதை தவறான விடயமாகும். என்றார்.

சம்பவம் தொடர்பில் அரநாயக்க பொலிஸ் நிலைய குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நீதவான் விசாரணையும் நடத்தப்பட உள்ளது.

தற்கொலையை தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்

  • தேசிய மனநல உதவி இலக்கம் 1926
  • இலங்கை சுமித்ரயோ 011 2696666
  • CCC line 1333

Add new comment

Or log in with...