அமெரிக்க வானில் சீனாவின் உளவு ‘பலூன்’ கண்டுபிடிப்பு

நாட்களில் அமெரிக்காவின் முக்கிய தளங்களுக்கு மேலால் பறந்த சீனாவினது என்று சந்தேகிக்கப்படும் உளவு பார்க்கும் பலூன் அவதானிக்கப்பட்டுள்ளது.

இது சீனாவுக்குச் சொந்தமான “வானின் அதிக உயரத்தில் பறக்கும் கண்காணிப்பு பலூன் ” என்பது உறுதியானது என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பலூன் மிக அண்மையில் மேற்கு மாநிலமான மொன்டானாவில் அவதானிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த பலூன் பாகங்கள் தரையில் விழுவதால் ஏற்படக் கூடிய ஆபத்துப் பற்றிய அச்சம் காரணமாக அதனை சுட்டு வீழ்த்தாமல் இருக்க இராணுவ அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பில் சீனா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. நிலைமை குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜொ பைடனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பொருள் அலஸ்காவின் அலூடியன் தீவுகள் மற்றும் கனடா வழியாக பறந்திருப்பதோடு பின்னர் கடந்த புதனன்று (01) மொன்டானாவின் பிலிங்ஸ் நகருக்கு மேலால் தெரிந்துள்ளது.

இந்தப் பொருளை சுட்டு வீழ்த்த வெள்ளை மாளிகை உத்தரவிடும் பட்சத்தில் எப்–22 உட்பட போர் விமானங்களை அரசு அதற்காக தயார் நிலையில் வைத்திருப்பதாக பெயர் குறிப்பிடாத மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தல் தொடர்பில் ஆராய்வதற்கு பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின் மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படை தளபதி ஜெனரல் மார்க் மில்லி உட்பட முன்னணி இராணுவ தலைவர்கள் கடந்த புதனன்று சந்தித்துள்ளனர்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டோனியோ பிளிங்கன் அடுத்த வாரம் சீனாவுக்கு பயணிக்கவுள்ள நிலையிலேயே இது நிகழ்ந்துள்ளது. பைடன் நிர்வாகத்தின் அமைச்சரவையைச் சேர்ந்த ஒருவர் சீனா பயணிப்பது இது முதல் முறையாக அமையும்.


Add new comment

Or log in with...