பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக டக்ளஸ் என். நாணயக்கார நியமனம்

- 2 பேர் இராஜினாமா செய்த நிலையில் ஒருவர் நியமனம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) புதிய உறுப்பினராக டக்ளஸ் என். நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் பெப்ரவரி 02ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் அனுப்பப்பட்டுள்ள நியமனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டக்ளஸ் நாணயக்காரவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்நியமனம் 2024 ஜூலை 16 வரை வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) உறுப்பினர்கள் 2 பேர் கடந்த வெள்ளிக்கிழமை தங்கள் பதவிகளை இராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பிரதித் தலைவராக கடமையாற்றிய உதேனி விக்ரமசிங்க, தாம் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்திருந்தார்.

மற்றுமொரு உறுப்பினரான அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, ஆணைக்குழுவின் பணிச்சூழலும் பணிமுறையும் விரும்பத்தகாத வகையிலும், சகிக்க முடியாததாகவும்,  தொழில்சார்ந்ததாக இல்லை எனவும், தெரிவித்து பதவி விலகத் தீர்மானித்ததாக அறிவித்திருந்தார்.

அதற்கமைய, 4 பேர் கொண்ட பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தற்போதைய தலைவராக ஜனக ரத்நாயக்கவும், அதன் உறுப்பினராக சத்துரிகா விஜேசிங்கவும் செயற்பட்டு வரும் நிலையில், ஆணைக்குழுவின் புதிய உறுப்பினராக டக்ளஸ் என். நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...