பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் இலங்கைத் திருநாட்டின் 75 வருடங்கள்

| பொருளாதார வீழ்ச்சிக்குள்ளான நாட்டை மீளக்கட்டியெழுப்பும் ஆற்றல் மிகுந்த தலைவர்; நாட்டில் நெருக்கடிகள் படிப்படியாக நீங்கும் அறிகுறிகள் |

| ஐரோப்பியரின் ஆதிக்கத்திலிருந்து, அனைத்து இனமக்களாலும் மீட்டெடுக்கப்பட்ட தாயக சுதந்திரம் |

இலங்கைத் திருநாடு சுதந்திரம் பெற்று 75 வருடங்களாகும் நிலையில், சுதந்திர இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமை போன்று இம்முறையும் பெருமையுடன் நடைபெறுகின்றன.

நாட்டில் நிலவும் பொருளாதார, அரசியல்,சமூக நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நமது மூதாதையர்கள் அடிமைத்தனத்திலிருந்து தாய்த்திருநாட்டை வெற்றி கொண்ட ஞாபகார்த்தமாகவும் அவர்களுக்கு வழங்கப்படும் கௌரவமாகவும் இம்முறை நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

நாட்டிற்கான செலவினங்கள் அதிகரித்து, வருமானம் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையிலும், நாட்டின் பேரபிமானத்தை பறைசாற்றும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களை தவிர்க்க முடியாத சூழ்நிலையில், செலவினங்கள் கட்டுப்படுத்தப்பட்டு எனினும் நாட்டின் தனித்துவத்தையும் பெருமையையும் பறைசாற்றும் வகையில் இம்முறை சுதந்திர தினத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உலகின் பார்வையில் பல்வேறு கோணங்களிலும் சிறப்புப் பெறும் நாடான இலங்கை என்றும் தமது தனித்துவத்தையும் பேரபிமானத்தையும் விட்டுக் கொடுக்காது ஏனைய சர்வதேச நாடுகளுடன் சரி சமமாக தன்னை இனங்காட்டி வந்துள்ளது.

யுத்தங்களும் பேரழிவுகளும் இயற்கை அனர்த்தங்களும் நாட்டை ஆட்டிப்படைத்த போதும், நாட்டின் தனித்துவம் செழுமை மற்றும் நற்பெயருக்கு எந்தவித களங்கமும் ஏற்படாத வகையில் நாடு முன்னோக்கி பயணித்து வருகிறது.

உலக அளவில் ஒருபோதும் எதிலும் சளைக்காத நாடாக தொடரும் பயணத்தில் சுதந்திர இலங்கையின் 75 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

அந்த வகையில் பொருளாதார நெருக்கடிகளினால் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடத்தப்படவில்லை. அதனை நடத்துவதற்குக் கூட வழியில்லாத நிலையில் நாடு காணப்படுகின்றது என்ற உலகின் பார்வையை தவிர்க்கும் வகையில் அனைத்து நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்த 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

அத்துடன் நாடு பெரும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல தலைதூக்கி வரும் நிலையில், அதற்கு பெரும் பங்களிப்பை வழங்கி வரும் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும் இம்முறை கொண்டாடப்படும் சுதந்திர தின நிகழ்வுகள் வழிவகுக்கும் என்றால் அது மிகையில்லை.

தேசபிதா டி.எஸ்.சேனநாயக்க முதல் இன்று இந்த நாட்டை ஆளும் தலைவர்கள் வரை தாய்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் அதன் பெருமையையும் தனித்துவத்தையும் கட்டிக் காப்பதற்காகவும் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ளனர்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் நாட்டின் தேவை மற்றும் அந்தந்த காலத்திற்கு பொருத்தமான பல்வேறு திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு அவ்வப்போது நாட்டை ஆண்ட தலைவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெரும் வீழ்ச்சிக்கு உள்ளாகியிருந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அதே வேளை, நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கக்கூடிய முக்கியமான அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.

2022 ஆம் ஆண்டு நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு ஆண்டாகும். நாட்டில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களுக்கு மத்தியில்

நாடு மிகவும் இக்கட்டான நிலையில் நிர்க்கதியாகி காணப்பட்டபோது, அத்தகைய ஒரு சூழ்நிலையில் இந்த நாட்டை பொறுப்பேற்க அனைத்து தலைவர்களும் பின் வாங்கிய நிலையில் துணிச்சலுடன் நாட்டைப் பொறுப்பேற்று நிலைமைகளில் மாற்றம் ஏற்படுத்திய சிறந்த அனுபவமும் விவேகமும் உள்ள அரசியல் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குறிப்பிட முடியும்.

எமது நாட்டை மட்டுமன்றி முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்து வருகின்றன.

குறிப்பாக நாட்டில் நிலவிய அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, உணவு பராமரிப்பில் ஏற்பட்டிருந்த பின்னடைவு, நாட்டின் ஏனைய அனைத்து துறைகளையும் செயல்படுத்தக் கூடிய எரிபொருள், எரிவாயு போன்ற முக்கிய தேவைகளையும் மக்கள் அன்றாடம் எதிர்கொண்ட வரிசை யுகத்தையும் மாற்றி, பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியிலும் மக்கள் இயல்பாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிய பெருமைக்குரியவராகவும் அவர் பார்க்கப்படுகின்றார்.

நாட்டின் அனைத்து நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டினதும் போராடி பெற்றுக் கொண்ட சுதந்திரத்தினதும் பெருமையை பறைசாற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களை நடத்த வேண்டும் என்ற அவரது தீர்மானம் அதற்காக மேற்கொண்ட செயற்பாடுகளும் பிரமிக்கத்தக்கவை.

அந்த வகையில் இம்முறை இலங்கைத் திருநாட்டின் 75 வது சுதந்திர தினம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பல்வேறு நன்மைகளை கொண்டு வரும் வகையில் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது என்பதையும் எவரும் மறுக்க முடியாது.

சுதந்திர தினத்தையொட்டி இம்முறை பல விசேட திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

நாடளாவிய 335 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் சுமார் 50,000 இளைஞர், யுவதிகளையும் இணைத்துக் கொண்டதாக பசுமை நகரங்களை கட்டியெழுப்பும் திட்டம் இந்த சுதந்திர தினத்தோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிந்தனையில் நாட்டின் அபிவிருத்திக்கு இளைஞர்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் இளைஞர் பாராளுமன்றம் ஆகியன ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சித் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளன.

இதற்கு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை மற்றும் அதனோடு இணைந்த அனைத்து நிறுவனங்களின் பங்களிப்புகளும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

அத்துடன் விடயத்தோடு சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மற்றும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் தன்னார்வ தொண்டர்களின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை சுதந்திர தினத்திற்கு முன்னோடியாக விசேட வழிபாடு ஒன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து ஏனைய மத வழிபாடுகள் மற்றும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அத்துடன் வழமையை விட வித்தியாசமான வகையில் கலாசார நிகழ்வுகள் பல சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர் நடைபெறும் முதலாவது சுதந்திர தின நிகழ்வாக இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

சுதந்திரத்தின் வரலாற்றுக் குறிப்பு:

எமது நாட்டின் சுதந்திரத்திற்கு ஒரு சிறப்பான வரலாறு காணப்படுகிறது. கி.பி 1505 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயரினால் இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டன. அதனைத்தொடர்ந்து கி.பி 1602 ஒல்லாந்தரின் ஏகாதிபத்தியத்துக்கு இலங்கையர்கள் அடிமைப்பட்டனர்.

கி.பி 1766 ஆம் ஆண்டளவில் பிரித்தானியரின் ஆக்கிரமிப்பின் காரணமாக கந்த உடரட்ட சிங்களவர்கள் என்று அழைக்கப்படும் மலைநாட்டு சிங்கள மக்களைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் வாழ்ந்த இலங்கை மக்களும் மீண்டும் அடிமை நிர்வாகத்திற்கு உட்பட வேண்டி ஏற்பட்டது.

கந்த உடரட்ட சிங்களவர்கள் என்று அழைக்கப்படும் மலைநாட்டு சிங்கள மக்களின் பிளவு அதிகார குழுக்களினால் 1815 ஆம் ஆண்டளவில் உடரட்ட என்ற மலையகப் பிரதேசத்தையும் எந்தவித சிரமமுமின்றி பிரிட்டன் தமது நிருவாகத்திற்கு உட்படுத்தியது. இதன் பின்னர் முழு இலங்கையும் ஆங்கிலேயரின் நிருவாகத்திற்குள் கொண்டுவரப்பட்டது.

இலங்கையர்களின் சுதந்திரப் போராட்டம் இங்கிருந்தே ஆரம்பமாகிறது. 1818 ஆம் ஆண்டு உடரட்ட என்ற மலையக பெருங்கலகம், 1823 ஆம் ஆண்டு கொஸ்வத்தை கிளர்ச்சி, 1826ஆம் ஆண்டு பிம்தென்னே கிளர்ச்சி, 1835 ஆம் ஆண்டு மல்வத்து விகாரையின் கிளர்ச்சி, 1848ஆம் ஆண்டு மாத்தளை பெருங்கிளர்ச்சி முதலான கிளர்ச்சிகள் நாட்டு மக்கள் இழந்த சுதந்திரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டவையாகும்.

1818 ஆம் ஆண்டு கிளர்ச்சியினால் சிறிய அளவில் அல்லது ஆங்கிலேயரின் நிர்வாகத்தில் அவர்களது கொடூரமான நிர்வாகத்தில் தளர்வை மேற்கொள்ள நேரிட்டது.

1831ஆம் ஆண்டில் அரசாங்க முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கோல்புறூக் ஆணைக்குழுவினர், முதல் முறையாக அவர்களது ஆட்சி முறையில் மறுசீரமைப்பு ஆலோசனையை சமர்ப்பித்தனர். பிரித்தானியர்களின் இந்த முயற்சி பெருமளவில் வெற்றியடையவில்லை.

1848 ஆம் ஆண்டு மாத்தளை பெருங்கிளர்ச்சி ஆரம்பமானதுடன் அது இலங்கை சுதந்திரப் போராட்டத்தின் இறுதி கிளர்ச்சியாக அமைந்தது. 1796ஆம் ஆண்டில் இலங்கையின் ஒரு பகுதி மாத்திரம் பிரிட்டனின் ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்படுத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் 1815 ஆம் ஆண்டில் முழு நாடும் பிரிட்டனின் நிர்வாகத்திற்கு உட்பட்டிருந்த யுகம் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி முடிவுக்கு வந்தது.

1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் கிடைத்த பின்னர் கடந்த 72 வருட காலப்பகுதியில் 1948 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு இரத்து செய்யப்பட்ட பின்னர் இரண்டு அரசியல் யாப்புகள் மூலம் நாடு முன்னெடுக்கப்பட்டது.

இதில் முதலாவது 1972 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மக்கள் குடியரசு யாப்பு ஆகும். அத்தோடு இரண்டாவது 1978 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பாகும்.

வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்து தாய்நாட்டின் இறைமைக்காக இரத்தம் சிந்தியவர்கள் மற்றும் உயிர்த் தியாகம் செய்தவர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எமது தாய்நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நாள் தொடக்கம் நாட்டு மக்கள் சுதந்திரத்திற்காக மேற்கொண்ட அளப்பரிய அர்ப்பணிப்பின் பெறுபேறே இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரமாகும்.

அடிமைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு கிளர்ச்சிக்கு மத்தியில் உயிரைத் தியாகம் செய்த பத்தாயிரம் பேரான தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர் போன்ற நாட்டுப் பற்று கொண்ட அனைவரது அர்ப்பணிப்பையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள், காலத்தால் மறக்க முடியாத இந்த நாட்டு மைந்தர்கள்.

அதன் பெறுபேறாக எதிர்காலத்தில் நாடு சிறந்த பயன்களையும் முன்னேற்றத்தையும் பெற்றுக் கொள்வதற்கு பின்புலத்தை வகுப்பது தற்போதைய யுகத்தின் தேவையாகும்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...