75ஆவது தேசிய சுதந்திர தின விழாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து

- இரு நாட்டு உறவுகளை தொடர்ந்தும் பேணுவதற்கு எதிர்பார்ப்பு 

இலங்கையின்  75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன்  இணைந்ததாக   இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கை மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தவாறு  அமெரிக்க ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்த , அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்டினால் ஜனாதிபதியிடம் இந்த வாழ்த்துச் செய்தி கையளிக்கப்பட்டது.

இரு நாட்டு மக்களின் அமைதியான, வளமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் தொலைநோக்கையும் தொடர்ந்து பேணுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜோ பைடன் இந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்துக்கு இணையாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கும் 75 ஆண்டுகள் நிறைவடைவதாகவும், இந்த நீண்டகால உறவு பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் சுபீட்சத்தை மேம்படுத்த உதவும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கு  எதிராகப் போராடுவது, மனிதக் கடத்தலைத் தடுப்பது மற்றும் பாதுகாப்பான, சுதந்திரமான மற்றும் திறந்த இந்து-பசுபிக் பிராந்தியத்தை பேணுவது உள்ளிட்ட விடயங்களில் வரலாறு முழுவதும் உலகளாவிய பாரிய சவால்களை இரு நாடுகளும் எதிர்கொண்டதாக ஜோ பைடன் நினைவு கூர்ந்துள்ளார்.

ஜனநாயக நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு  ஒற்றுமை, சுதந்திரம் மற்றும் சமத்துவத்தின் ஊடாக  மேலும் வலுவடைவதாக பைடென் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


Add new comment

Or log in with...