கட்சியை விட்டு விலகிச் சென்றோர் விரைவில் நீக்கப்படுவர்

சட்ட ஆலோசனை பெறப்படுகிறது

கட்சியை விட்டுச் சென்றவர்களை கட்சியிலிருந்து விலக்குவது தொடர்பில், தேவையான சட்டபூர்வ ஆலோசனைகளை பெற்று வருவதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பொதுஜனபெரமுன மற்றும் அதனோடு கூட்டிணைந்துள்ள கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற முக்கிய பேச்சுவார்த்தையிலே,

அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் அவரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது, கட்சியை விட்டுச் சென்றவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதா?

பதில் : அவர்கள் அனைவரும் கட்சியிலிருந்து விலக்கப்படுவார்கள்.

கேள்வி : அவ்வாறானால் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டளஸ் அழகப்பெரும ஆகியோரும் விலக்கப்படுவார்களா?

பதில் : ஆம். அனைவர் தொடர்பிலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்காக, நாம் மேற்கொண்டுள்ள செயற்பாடுகளுக்கு தேவையான சட்ட ஆலோசனையைபெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி : கட்சியை விட்டு விலகியவர்களின் பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? கட்சியின் தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளாரா?

பதில் : ஜீ.எல்.பீரிஸ் கட்சியைவிட்டு சென்றதால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. வெற்றியீட்டிக்கொள்ளக் கூடிய சிறந்த தரப்பு எம்மிடமுள்ளது. நாம் தேர்தலுக்கான பிரசாரங்களை ஆரம்பித்துள்ளோம்.

வாக்கு எண்ணும் போது, யார் வெற்றி பெற்றார்கள் என்பது தெரிய வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...