சுதந்திர தினத்தில் சுதந்திரம் பெறும் இலங்கையின் அடிமை தீவு

- 'Slave Island' இற்கு ஆங்கிலத்திலும் கொம்பனித் தெரு

ஆங்கிலத்தில் 'Slave Island' (ஸ்லேவ் ஐலண்ட்) என அழைக்கப்படும் கொம்பனித்தெரு (கொழும்பு 02) பிரதேசத்தை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கொம்பனித்தெரு என பயன்படுத்துவது தொடர்பில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்கவினால் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு இது தொடர்பான பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பணிப்புரையின் பிரகாரம், 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள இத்தீர்மானம் குறித்து தபால் மா அதிபர் மற்றும் கொழும்பு மாநகர ஆணையாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்களத்திலும் தமிழிலும் கொம்பனித் தெரு எனப் பயன்படுத்தப்பட்டாலும், காலனித்துவ காலத்தில் குறித்த இடத்தை விவரிக்கப் பயன்படுத்தப்பட்ட ஸ்லேவ் ஐலண்ட் (அடிமை தீவு) எனும் பெயர் இன்றும் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...