மெல்பேர்ன் இலக்கிய சந்திப்பும், ஆவூரானின் நூல் வெளியீடும்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் மூத்த எழுத்தாளர் 'ஆவூரான் சந்திரன்' எழுதிய ‘சின்னான்’ குறுநாவல் வெளியீடு கடந்த சனிக்கிழமை மாலை (28/01/2023) மெல்பேர்னில் உள்ள பேர்விக் (Berwick) மூத்த பிரஜைகள் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.

எழுத்தாளரும், வானொலி ஊடகவியலாளருமான திருமதி சாந்தினி புவனேந்திரராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

புலம்பெயர் இலக்கிய நூற்றாண்டு:

தமிழ் இலக்கிய வரலாற்றில் புலம்பெயர் இலக்கியத்துக்கான நூற்றாண்டாக இருபத்தோராம் நூற்றாண்டைக் குறிப்பிடலாம். போர்ச்சூழலால் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் சென்று வாழ்கின்ற தமிழர்கள், தாம் சென்றடைந்த நாடுகளிலெல்லாம் தமது இருப்பை நிலைநிறுத்தும் முயற்சியில் மொழி, இலக்கியம், சமயம், பண்பாடு ஆகிய மரபு வேர்களை ஆழமாகப் பதிப்பித்து முனைப்புடன் செயலாற்றுவதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது என இந்நூலின் முன்னுரையில் சி. சண்முகராஜா குறிப்பிட்டுள்ளார்.

இக்குறுநாவல் வெளியீட்டு நிகழ்வில் பாடும்மீன் சிறிஸ்கந்தராசா, கம்பன் கழக குமாரதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், எழுத்தாளரும், சமூகச்செயற்பாட்டாளருமான ஆவூரான் சந்திரனுக்கு இந்த ஆண்டு மணிவிழாக் காலம் என்றும் வாழ்த்தினர்.

சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்களை மையமாக வைத்து சமுதாயப் பொறுப்புணர்வோடு படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அப்படியான அடித்தள மக்கள் பற்றிய சமூகச் சிந்தனையோடுதான் 'சின்னான்' குறுநாவல் நடைபோடுகிறது என ஆய்வுரை வழங்கியவர்கள் குறிப்பிட்டனர். இந்நூலின் ஆய்வுரையை கலாநிதி வேர்ஜினா மருதூர்க்கனி, கேதா, திவாகரன் ஆகியோர் வழங்கினர்.

மூத்த எழுத்தாளர் லெ. முருகபூபதி இந்நூலாசிரியரைப் பற்றி சிறப்புரை ஆற்றினார். ஆவூரானின் முதலாவது கதைத் தொகுதியான ‘ஆத்மாவைத் தொலைத்தவர்கள்’ நூல் சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வெளியீடாக வெளியானது. இந்நூலை கொழும்பு ஞானம் இலக்கியப் பண்ணை பதிப்பித்தது என்றும் தன் சிறப்புரையில் மூத்த எழுத்தாளர் லெ. முருகபூபதி குறிப்பிட்டார்.

தற்போது வெளியாகியிருக்கும் ‘சின்னான்’ குறுநாவல் யாழ்ப்பாணம் ஜீவநதி வெளியீட்டகத்தால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஆவூரான் வாழ்ந்து, கல்விகற்ற பரந்தனிலும் இந்நூல் முதலில் வெளியாகியது. கடந்த வாரம் 22.01.2023 ஞாயிறு பரந்தன் குமரபுரம் தர்மம் மண்டபத்தில் நடைபெற்ற 'சின்னான்”'குறுநாவல் நூல் வெளியீட்டு விழாவில் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ஐங்கரன் விக்கினேஸ்வரா...


Add new comment

Or log in with...