எந்த தடை வந்தாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்

- உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோரிடம் மனிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தாம் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று(31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா 27 வருடங்கள் சிறையில் இருந்தார். சிறையில் இருந்து அவர் வெளியேறிய பின்னர் நாட்டு மக்கள் அவரை நாட்டின் தலைவராக ஆக்கினர். எனவே எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நான் பின் வாங்குபவன் அல்ல என்பதை தெளிவாக கூறிக்கொள்கின்றேன். எந்த ஒரு சதி திட்டத்திற்கும் நான் அஞ்சப் போவதில்லை. இந்த வழக்குகளை தாக்கல் செய்தவர்களே சதித்திட்டங்களை மேற்கொள்கின்றனர். அதற்கு அப்பால் நான் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறேன்; சட்டத்திற்கு மதிப்பளிக்கிறேன் நீதிமன்றத்திற்கு தலை வணங்குகின்றேன். நெல்சன் மண்டேலா எனும் கதாபாத்திரத்தை நான் நன்கு அறிவேன். எனக்கு எந்த வகையான தொந்தரவுகளை செய்தாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எனது கட்சியின் ஒத்துழைப்புடன் எனக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தாலும் அதில் வெற்றி பெறுவேன் எனும் நம்பிக்கையுடன் நான் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என்பதை கூறிக் கொள்கின்றேன்."

இதேவேளை, தமது ஆட்சிக் காலத்தில் தனது நாட்டில் நடத்தப்பட்ட 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் அதேபோன்று கத்தோலிக்க மக்களிடம் இறைவனுக்காக தாம் மன்னிப்பு கோருவதாக முன்னாள் ஜனாதிபதியும், ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தவிசாளருமான மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார்.

வேறு நபர்களால் மேற்கொள்ளப்பட் குறித்த தாக்குதல் தொடர்பில் தனக்கு நஷ்டஈடு செலுத்துமாறு நீதிமன்றத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த விடயத்தில் தாம் தவறிழைத்ததாக நீதிமன்றத்தினால் தெரிவிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி என்ற வகையில் அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தவறிழைக்கும் பட்சத்தில் அதற்கு ஒரு ஜனாதிபதியும் பொறுப்பு கூறவேண்டிய கடப்பாடு உள்ளதாக குறித்த நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன இதன்போது சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...