கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் உயிரிழப்பு

- கதவோரம் நின்று வீடியோ எடுத்த வேளையில் விபத்து: பொலிஸ்
- நாளை கிளிநொச்சி, முரசுமோட்டையில் இறுதிக்கிரியைகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த ஊடகவியலாளர் எஸ்.என். நிபோஜன் நேற்று (30) மாலை தெஹிவளை பகுதியில் புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தொழில் நிமித்தம் காலி சென்று, ரயிலில் மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயணித்துக்கொண்டிருந்த ரயிலின் கதவோரத்தில் இருந்து வீடியோ பதிவு செய்ய முயற்சித்த போது, இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சடலம் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு  பிரேத பாிசோதனையின் பின் கிளிநொச்சி  கொண்டு செல்லப்பட்டு கிளிநொச்சி, முரசுமோட்டை கிராமத்தில் உள்ள அவரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நாளை (01) புதன் கிழமை இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை பல்வேறு நெருக்கடி நிலைகளுக்கு மத்தியில் வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர் நிபோஜன் ஒரு சிறந்த புகைப்பட கலைஞராகவும் திகழ்ந்தார்.

2010 இற்கு பின்னர் ஊடகத்துறைக்குள் பிரவேசித்த நிபோஜன் குறுகிய காலத்தில்  நாடாளவிய ரீதியில் அறியும் அளவுக்கு தன்னுடைய ஊடக செயற்பாட்டில் துருத்திக்கொண்டு செயற்பட்ட ஒருவராக காணப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இளம் ஊடகவியலாளராக துடிப்புடன்  செயற்பட்டு வந்த ஒருவரின் இழப்பு மாவட்டத்தில் அனைவரினதும் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(கிளிநொச்சி குறூப் நிருபர் - எம். தமிழ்செல்வன், மாங்குளம் குறூப் நிருபர் - எஸ். தவசீலன்)


Add new comment

Or log in with...