பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள பள்ளிவாசலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 28 பேர் பலி

- சுமார் 150 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி
- தற்கொலை குண்டுத் தாக்குதல் என நம்பப்படுகின்றது

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஒரு பள்ளிவாசலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் முஹம்மது ஆசிம், 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 70இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், சர்வதேச செய்தி நிறுவனமான அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளதாக, அச்செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தொழுகைக்காக ஏராளமான மக்கள் கூடியிருந்த பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு நடந்ததாக பொலிஸ் அதிகாரி சிக்கந்தர் கான்  ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்த நிலையில் பலர் அதன் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது, என கான் மேலும் கூறினார்.

குண்டுவெடிப்புக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.

பள்ளிவாசலின் பிரதான மண்டபத்தின் கொள்ளளவு கிட்டத்தட்ட 300 ஆக இருந்தது என்றும் வெடித்த நேரத்தில் அது "கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது" என்றும் பெஷாவரின் பொலிஸ் தலைவர் முஹம்மது இஜாஸ் கான் தெரிவித்துள்ளார்.

"தற்கொலை தாக்குதல் நடத்தியவர் இருப்பதை தற்போது எங்களால் உறுதிப்படுத்த முடியாது, ஆனால் நாங்கள் இன்னும் விசாரணைகளை நடத்த வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார். "இருப்பினும், தற்கொலை குண்டுதாரியினால் இதனை மேற்கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நகரின் சிவப்பு வலயத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பெஷாவரின் பொலிஸ் வளையத்திற்குள் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ளதோடு, முதலமைச்சர் மாளிகை, ஆளுநர் மாளிகை, கைபர் பக்துன்க்வா மாகாண சட்டமன்றக் கட்டடம் உட்பட பல முக்கியமான அரசாங்க கட்டங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளது.

வெளிவரும் விபரங்களின் அடிப்படையில் தற்கொலை குண்டுதாரி மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

பள்ளிவாசலுக்குள் ஜமாஅத் தொழுகையின் முன் வரிசையில் குண்டுதாரி அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

தொழுகை தொடங்கிய சில நொடிகளில் அந்த இடத்தில் தாக்குதல் நடந்ததாக தாக்குதலில் இருந்து தப்பிய பொலிஸ் அதிகாரியான ஷாஹித் அலி தெரிவித்துள்ளார்.

“கறுப்பு புகை வானத்தில் எழுவதை நான் கண்டேன். என் உயிரைக் காப்பாற்ற நான் வெளியே ஓடினேன், ”என்று 47 வயதான அவர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...