9ஆவது பாராளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி 08 இல்

- 3ஆவது கூட்டத் தொடரில் 58 நாட்கள் பாராளுமன்றம் கூடியது
- ஒரு சில பாராளுமன்ற குழுக்கள் தவிர்ந்த ஏனைய குழுக்கள் மீள் நியமனம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 33 உறுப்புரையின் (அ) மற்றும் (ஆ) உப பிரிவுகளுக்கு அமைய பாராளுமன்றத்தின் ஒரு கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும்போது ஜனாதிபதி பாராளுமன்றத்தை வைபவரீதியாக ஆரம்பித்துவைத்து, அக்கிராசனத்தை ஏற்று அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்படும்போது பாராளுமன்றத்தினால் முறையாக பரிசீலனை செய்யப்படாத வினாக்கள் மற்றும் பிரேரணைகள் இரத்தாவதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அவை தொடர்பில் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பாராளுமன்ற இணைப்புக் குழு, உயர் பதவிகள் பற்றிய குழு, விசேட குழுக்கள் மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் தவிர்ந்த ஏனைய குழுக்கள் புதிய கூட்டத்தொடரில் மீண்டும் புதிதாக நியமிக்கப்பட வேண்டும்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் 2020 ஓகஸ்ட் 20 முதல் 2021 டிசம்பர் 12 வரையும், இரண்டாவது கூட்டத்தொடர் 2022 ஜனவரி 18 முதல் 2022 ஜூலை 28 வரையும் இடம்பெற்றது. அதற்கமைய, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் 2022 ஓகஸ்ட் 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் ஜனவரி 27ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரும் வரை பாராளுமன்றம் 58 நாட்கள் கூடியிருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஜனவரி 27ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரைக்கு அமைய அவருக்குரித்தாக்கப்பட்ட தத்துவங்களுக்கு அமைய பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...