ஜி20 நாடுகளது பாரிய நகரங்களின் அபிவிருத்தி பிரச்சினைகள் குறித்து அஹமதாபத்தில் கூட்டம்

ஜி20 அமைப்பு நாடுகளின் பாரிய நகர்களில் நிலவும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் குறித்த மேயர்கள் உச்சி மாநாட்டுக்கு முன்னோடியான கூட்டம் இந்தியாவின் அஹ்மதாபாத்தில் நடைபெற உள்ளது.

அதற்கான ஏற்பாடுகளை சர்வதேச தொண்டர் நிறுவனங்களான சி 40 என்ற அமைப்பும் ஐக்கிய நகரங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் நிறுவனமும் இணைந்து மேற்கொண்டுள்ளன. 'எதிர்வரும் 9 - 10 ஆம் திகதிகளில் நடைபெறும் இக்கூட்டத்தில் பாரிய நகரங்களில் அபிவிருத்தி தொடர்பில் நிலவும்  பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும்' என்று குறிப்பிட்டுள்ள குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் 'தேசிய மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு இடையில் ஆக்கபூர்வமான கலந்துரையாடலுக்கும் ஜி20 அமைப்பின் நிகழ்ச்சி நிரலில் நகரங்களின் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளின் முக்கியத்துவத்தை மேம்படுத்தவும் வழிவகை செய்யும்' என்றுள்ளார்.

ஜி20 அமைப்பின் தலைமைப் பதவியை இந்தியா ஏற்றுள்ளதைத் தொடர்ந்து  ஜி20 அமைப்பு நாடுகளின் பல்வேறு விடயங்கள் குறித்த மாநாடுகளும் கூட்டங்களும் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பாரிய நகரங்களில் நிலவும் அபிவிருத்தி குறித்த பிரச்சினைகள் தொடர்பிலான மேயர்கள் மாநாட்டுக்கு முன்னோடியாக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஜி20 அமைப்பானது காலநிலை மாற்றம் மற்றும் உணவு நெருக்கடி ஆகிய விடயங்களை மாத்திரமல்லாமல் இவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பாரிய நகரங்களில் நிலவும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்துகின்றன.

'யுனெஸ்கோவின் உலக மரபுரிமை நகரான அஹ்மதாபாத்தில் நகரில் நடைபெறும் இக் கூட்டம் உலகத் தலைவர்களின் கலந்துரையாடல் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான ஒரு மன்றமாகவும் அமையும்' என்றும் முதல்வர் பட்டேல் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...