பயங்கரவாதத்துக்கு எதிரான போரை தீவிரப்படுத்த உதவும் - அப்துல் மக்கி மீதான ஐ.நா. தடை குறித்து இந்தியா

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று லக்ஷர் ஈ தொய்பாவின் பிரதித் தலைவரான அப்துல் ரெஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு சபை அறிவித்துள்ளதை இந்திய அரசு வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்ஷி, மக்கியின் மீதான தடையானது பயங்கரவாதத்தின் மீது உலக நாடுகள் மேலும் இறுக்கமான எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருப்பதாக தெரிவித்தார்.  இத்தடை மூலம் மக்கியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும், பயணத்தடையும், ஆயுத கொள்வனவுத் தடையும் விதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அமைச்சின் பேச்சாளர்,  
'பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் இப் பிராந்தியத்தில் அதிகம். ஐ.நா. பாதுகாப்பு சபையின் இந்த அறிவிப்பு இத்தகைய அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்தி பயங்கரவாத கட்டமைப்புகளைத் தகர்க்க உதவும்' என்று மேலும் தெரிவித்தார். 
2021 – 22 காலப்பகுதியில் அமெரிக்காவுடன் இணைந்து மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கச் செய்யும் பிரேரணையை பாதுகாப்பு சபையில் இந்தியா கொண்டு வந்தது.
எனினும் நிரந்தர பாதுகாப்பு சபை உறுப்பினரான சீனா அதற்கு எதிராக இருந்ததால் இந்த உத்தரவு ஆறுமாதகால தாமதத்தின் பின்னரேயே அமுலுக்கு வந்துள்ளது. 
பாக். நீதிமன்றம் 2019ம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அப்துல் மக்கியை விசாரித்து ஒன்பதாண்டு சிறைத் தண்டனையை 2021ம் ஆண்டில் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...