மக்களின் உடல், உள ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் அன்றாட செயற்பாடுகள்

நோய்கள் அணுகாது இயன்றவரை ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமெனில் 'வருமுன் காப்போம்' எனும் பழமொழிக்கு ஏற்ப நாளாந்தம் கடைப்பிடிக்கும் செயற்பாடுகளை சரிவர செய்தாலே போதுமானது.

அதிகாலையில் நித்திரையிலிருந்து எழுந்து நீராடி கடவுளை பிரார்த்தித்து நமது அன்றாட கடமைகளை தொடங்கினால் சிறப்பான பலன் கிடைக்கும். உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன், சுறுசுறுப்பாக சகல வேலைகளையும் இலகுவில் செய்ய முடியும். அதேபோல, இக்காலப்பகுதி படிப்பதற்கு உரிய சிறப்பான நேரமாகும். எனவே, பெற்றோர் தமது குழந்தைகளை இந்நேரத்தில் படிப்பதற்கு பழக்க வேண்டும்.

அதிகாலை எழுந்ததும் முதலில் காலைக்கடன்களை செவ்வனே செய்ய வேண்டும். மலசலம் சீராக கழித்து, பின்னர் பல்துலக்கி அதன்பின்னர் நீராட வேண்டும். தினமும் நீராடல் அவசியம், தோய்த்துலர்ந்த சுத்தமான ஆடைகளை எப்போதும் அணிய வேண்டும்.

அதிகாலை படுக்கையிலிருந்து எழுந்ததும் பல்துலக்காமல் தேநீர், கோப்பி, பால் போன்றன அருந்துதல் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பல்துலக்கியதும் தூயநீரை அருந்துவது நல்லது.

நீரைச் சேமிக்க பயன்படுத்தும் பாத்திரங்களையும், அருந்துவதற்கு பயன்படுத்தும் பாத்திரங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் போத்தல்களில் நீரை சேமித்து வைத்து அருந்துதல் இயன்றளவு தவிர்க்கப்படவேண்டும்.

எங்கேயும், எப்போதும், சுத்தமாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவிக் கொள்ள வேண்டும். முக்கியமாக, மலசலகூடத்திற்கு சென்ற பின், உணவு சமைக்க முன், உணவு பரிமாற முன், உணவு உண்ண முன்னரும், பின்னரும், தும்மல் அல்லது இருமலின் பின்னர், காயத்திற்கு மருந்திட முன், பின், குழந்தைகளை தூக்குவதற்கு முன், வெளியில் சென்று வந்த பின், நோயாளிகளைப் பராமரிக்க முன்னும், பின்னரும், விலங்குகளை தொட்ட பின், தும்புத்தடி, விளக்குமாறு போன்றவற்றை பயன்படுத்திய பின், குப்பைகளை அகற்றிய பின் போன்ற நிலைகளில் கைகளை சவர்க்காரம் இட்டு கழுவுதல் அவசியம். குறைந்தது 20 செக்கன்களாவது கைகளை தேய்த்து நன்கு கழுவ வேண்டும்.

காலை உணவு மிக மிக இன்றியமையாதது ஆகும். இரவு உணவினை தவிர்த்தாலும் காலையுணவு சத்தான ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும்.

நாம் உண்ணும் மதிய உணவில் உப்பு, இனிப்பு அளவாகவும், கொழுப்பு சத்து குறைந்ததாகவும், தானியங்கள், தீட்டாத அரிசி, பழங்கள், கீரைவகைகள், காய்கறிகள் அதிகளவும் சேர்த்து நிறையுணவாக உண்ணலாம். அத்துடன் மதிய உணவு சரியான நேரத்தில் உண்ணப்பட வேண்டும். நன்கு வேகவைத்த உணவுகளையும், அளவான வெப்பநிலையில் சமைத்த உணவுகளையும் உண்ணலாம். சமைத்த உணவுகளை நீண்ட நேரத்தின் பின் உள்ளெடுக்கக் கூடாது. இலகுவில் கெட்டுப்போகக் கூடிய உணவுகளை வெளியில் வைத்திருக்கக் கூடாது. அதற்காக குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அடிக்கடி சூடுகாட்டி உண்ணக் கூடாது. நீண்ட நாட்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கக் கூடாது.

போதியளவான சீரான உறக்கம் என்பது மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. தற்போதைய ஆய்வுகளின்படி வயது வந்தவர்கள் குறைந்தது 7 தொடக்கம் 9 மணித்தியாலங்கள் உறங்க வேண்டியது அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது.

இவையெல்லாம் அனைவருக்கும் தெரிந்த சாதாரண விடயங்களாக இருந்தாலும், அவற்றைச் சரிவரக் கடைப்பிடித்தால் மட்டுமே நோயற்ற வாழ்வினை இவ்வையகத்தில் வாழமுடியும் என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டும்.

வைத்திய கலாநிதி வினோதா சண்முகராஜா...

சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவ அலகு,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்


Add new comment

Or log in with...