பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களை அச்சுறுத்தல் விடுத்ததாக கைதான இருவருக்கும் பிணை

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைதான ஆனந்த பாலித்த மற்றும் சஞ்சீவ தம்மிக்க ஆகியோர், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் இன்று (26) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித்த மற்றும் மின்சார நுகர்வோர் சங்க செயலாளர் சஞ்சீவ தம்மிக்க ஆகியோர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த இருவரும் கடந்த திங்கட்கிழமை (23) கைது செய்யப்பட்டதோடு, அவர்களுக்கு இன்று (26) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மின் கட்டணத்தை அதிகரிப்பதை மேற்கொள்ளாதிருப்பது தொடர்பில் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மொஹான் சமரநாயக்க மற்றும் உதேனி விக்ரமசிங்க ஆகியோர் மாற்று கருத்தை கொண்டுள்ளமை தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிடுவதற்காக சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் அண்மையில் ஆணைக்குழுவிற்கு வந்திருந்த வேளையில், ஆனந்த பாலித்த மற்றும் சஞ்சீவ தம்மிக்க ஆகிய இருவரும் அச்சுறுத்தும் வகையில் பேசியதாக தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...