நேட்டோ அங்கத்துவம்: சுவீடனுக்கு ஆதரவளிக்க துருக்கி ஜனாதிபதி மறுப்பு

சுவீடன் தனது நேட்டோ அங்கத்துவ விண்ணப்பத்திற்கு துருக்கியின் ஆதரவை எதிர்பார்க்கக் கூடாது என துருக்கி ஜனாதிபதி தையிப் எர்துவான் குறிப்பிட்டுள்ளார். ஸ்டொ க்ஹோமில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் குர்ஆன் பிரதி எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்தே சுவீடன் நேட்டோவில் இணைய விண்ணப்பித்தது. ஆனால் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் கிடைக்க அங்கத்துவ நாடான துருக்கியின் ஆதரவு தேவையாக உள்ளது.

இந்நிலையில் சுவீடனில் குர்திஷ்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எர்துவானின் உருவ பொம்மை தொங்கவிடப்பட்டதோடு குர்ஆன் பிரதி எரிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை சுவீடன் அரசு கண்டித்தபோதும் அது மாத்திரம் போதாது என்று துருக்கி தெரிவித்துள்ளது.

'எமது நாட்டு தூதரகத்திற்கு முன்னால் அவமதிப்புடன் செயற்படுபவர்கள் அவர்களின் விண்ணப்பம் தொடர்பில் எங்களிடம் இருந்து எந்த ஆதரவையும் எதிர்பார்க்கக் கூடாது' என்று எர்துவான் குறிப்பிட்டார்.

நேட்டோ அங்கத்துவ நடான துருக்கியால், மற்றொரு நாடு அந்த இராணுவக் கூட்டணியில் இணைவதை தடுக்க முடியும். இது தொடர்பில் துருக்கி ஏற்கனவே சுவீடனுக்கு பல நிபந்தனைகளை விதித்துள்ளது. குறிப்பாக துருக்கியினால் பயங்கரவாதிகள் என கூறப்படும் சில குர்திஷ்களை நாடுகடத்தும்படி அது சுவீடனை கேட்டுள்ளது.


Add new comment

Or log in with...