வாசிப்புப் பழக்கம் குன்றிப் போவதால் எதிர்கால சந்ததிக்கு பெரும் பாதிப்புகள்!

மாணவர்கள் எவற்றையெல்லாம் தேடி வாசிக்க வேண்டும்?

வாசிப்பு என்பது அன்றாட வாழ்க்கையில் இயல்பான ஒரு செயற்பாடாக இருக்க வேண்டும். அன்றாடம் குளிப்பது, உண்பது மாதிரி வாசிப்பும் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால், நம் சமூகம் இப்படி நினைப்பதில்லை. பாடசாலைப் படிப்பு வேலைக்கான உத்தரவாதம் என்று நம்புகிறார்கள்; ஆனால் வாசிப்பது வாழ்க்கைக்கான ஊட்டம் என்று பலரும் கருதுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பாடசாலை, கல்லூரிப் படிப்புக்குப் பிறகு வாசிக்கும் பழக்கம் பலரிடம் இல்லாமலே போகின்றது. ஒட்டுமொத்தக் குடும்பத்தினரும் இந்தப் பழக்கத்தை முக்கியமில்லாதது என்றே கருதுகிறார்கள்.

எப்பொழுதோ நிகழ்ந்ததை இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை இங்குள்ள நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே. எவரோ அறிந்ததை நாமும் தெரிந்து கொள்ளத் துணைநிற்பவை நூல்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ அப்படியே தான் இன்றும்.

எப்படியும் வாழலாம் என்பது விலங்குகளின் வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை. முன்பு வாழ்ந்தவர்களின் அனுபவங்களையும், அறிவையும் எடுத்துக் கொண்டு அவர்கள் விட்ட இடத்திலிருந்து வாழ்வைத் தொடர்வதால்தான் மனித வாழ்க்கை தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது. படித்தல் தொடர்ந்து மூளையில் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துகிறது, நினைவகத்தை மேம்படுத்துகிறது,

மேலும், நீண்ட காலம் வாழ உங்களுக்கு இது உதவுகிறது. படித்தல் மனஅழுத்த அளவைக் குறைக்கும். வயது தொடர்பான அறிவாற்றலை இது மேம்படுத்தும். புத்தக வாசிப்பு உங்கள் பயணத்தின் போது அல்லது படுக்கைக்கு முன்பாக இருந்தாலும், ஒரு புத்தகத்தை எடுக்க ஒவ்வொரு நாளும் நேரத்தை ஒதுக்குங்கள். பாடப்புத்தகங்கள், கவிதைகள், நினைவுக் குறிப்புகள் மற்றும் செய்தித்தாள்கள் என வாசிப்பு என்பது வாழ்நாள் முழுவதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நம் ஓய்வு நேரத்தில், நாம் ஈடுபடக் கூடிய பல்வேறு வகையான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். சிலர் ஆற்றல் நிறைந்த செயல்பாடுகளை விரும்புகிறார்கள், மற்றவர்கள் குறைவான நேரம் உறங்கச் செல்கிறார்கள். பெரிய னிதர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது நம்மைச் சரியான வழியில் நடக்கவும், நம்மிடமுள்ள குறைகளை வெளியே கொட்டிவிட்டு நிறைகளை நிரப்பிக் கொள்ளவும் உதவும். நீங்கள் எந்தத் துறையில் சாதனை புரிய விரும்புகின்றீர்களோ அந்தத் துறையில் உயர்ந்த நிலையை அடைந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தேடிப் படியுங்கள்.

சந்தித்த தடைகளைத் தகர்த்தெறிய, அவர்கள் கடைப்பிடித்த அணுகுமுறைகளை நமக்கு படிகளாக்கிக் கொள்ளவும், அவர்கள் விட்டதிலிருந்து அடுத்தபடிக்கு மேலேறிச் செல்லவும் அவை துணைபுரியும். வாழ்க்கை வரலாறுகளை மட்டுமின்றி சாதாரண மனிதனை சாதனையாளனாக்க வழிகாட்டுகிறது. சுயமுன்னேற்ற நூல்களைப் படிப்பது நம்மை மேன்மைப்படுத்தும்.

பெரிய மனிதர்களின் சுயமுன்னேற்ற நூல்களைப் படிப்பது நம் வளர்ச்சிக்கு படிக்கல்லாகும். இவர்களின் நூல்கள் அந்தந்த நாட்டின் நடப்புகளுக்கும், நாகரிகங்களுக்கும் ஏற்ப எழுதப்பட்டிருப்பினும் அடிப்படையான உண்மைகள் நமக்கும் ஏற்றதே.

இன்றைக்கு நம் சமூகத்தில் பெரும்பாலான குடும்பங்களில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லை. கணவன் வாசிக்கும் பழக்கம் உடையவனாக இருந்தால், மனைவிக்கு அது பிடிப்பதில்லை. வீணான பழக்கம் என்று அவள் கருதுவாள். மனைவிக்குப் புத்தகங்களில் ஈடுபாடு இருந்தால், கணவன் அதைப் பழித்துப் பேசுவான்.

அதேபோல் ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் புத்தகம் வாங்க நினைத்து, கணவனைப் பார்க்கும் மனைவியைக் கண்ணால் ஜாடைசெய்து தடுக்கும் கணவன்களையும் பார்த்திருக்கிறோம்.

குழந்தைகளும், பெற்றோர்களும் ஒன்றாகப் வாசிக்க வேண்டும். பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் படித்தல் புத்தகங்களுடன் அன்பான மற்றும் மகிழ்ச்சியான தொடர்புகளை உருவாக்குகிறது. புத்தகங்களை விரும்பிப் படிக்கும் தம்பதியரை அரிதாகவே பார்க்க முடிகிறது.

பெற்றோர் புத்தகங்களை வாசிக்கும்போது, குழந்தைகளின் ஆரோக்கியமான மனவளர்ச்சிக்கான சாத்தியங்கள் கூடுகின்றன. வீட்டில் வாசிப்பது பிற்காலத்தில் பாடசாலை செயல்திறனை அதிகரிக்கும். சொல்லகராதி அதிகரிக்கிறது, சுயமரியாதையை உயர்த்துகிறது, நல்ல தகவல்தொடர்பு திறன்களை உருவாக்குகிறது, மேலும் மனித மூளையாக இருக்கும் கணிப்பு இயந்திரம், சுயக்கணிப்பு பலப்படுத்துகிறது.

இலக்கியத்தை வாசிப்பது மட்டும் வாசிப்பு என்று பரவலாக மக்கள் நினைக்கிறார்கள். வாசிப்பு எந்தத் துறையைச் சார்ந்தும் இருக்கலாம். தன் தொழில் தொடர்பாக வாசிப்பதை நாம் வாசிப்பு என்று கொள்ள முடியாது. பல துறைப் புத்தகங்களையும் வாசிக்கும்போதுதான் ஒருவருடைய வாசிப்பு வளமாகும் என்று கூறலாம். இலக்கியம் ஒரு பகுதிதான். வரலாறு, பொதுமக்களுக்கான அறிவியல், வாழ்க்கை வரலாறு, அரசியல், இசை என்று வாசிப்பு பல துறைகளையும் உள்ளடக்கியிருக்கும் போது தான் நம் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைகிறது.

உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான ஓர் இடத்தின் பெயரைச் சொல்லுங்கள் என்று ஆப்ரகாம் லிங்கனிடம் கேட்ட போது என் மனதிற்குப் பேரின்பத்தை அள்ளி அள்ளி வழங்கும் ஒரே இடம் நூலகமே என்று கூறியுள்ளார். வீடு தோறும் நூலகம் வேண்டும் என்கின்றனர் அறிஞர்கள். இந்த மின்னணு யுகத்தில் கூட கணினி, இணையம், இணைய தளம், மின்னணு நூலகம் ஆகியவற்றின் மூலம் தேவையான செய்திகளைப் பெறமுடியும் என்றாலும் நூலகம் தனக்குரிய இடத்தை இழந்து விடவில்லை.

எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் புத்தகத்தைக் கையிலெடுத்துப் படிப்பதில் ஒரு தனிச்சுகம் உண்டு. இன்டர்நெட்டில் ஒன்றைப் படிக்க வேண்டும் என்றால் பல அம்சங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஆனால் புத்தகம் கையில் இருந்தால் படிப்பதற்கு ஒரு தடையும் இல்லை. உட்கார்ந்து படிக்கலாம், கொஞ்சம் சாய்ந்தவாறு படிக்கலாம், மொட்டை மாடியில், படிக்கட்டில், வயல் வரப்பில், பிரயாணத்தில் என்று எங்கும், எப்படியும் படிக்கலாம்.

புத்தகம் படிப்பது கூட ஒரு வகையான தியானம்தான். தியானம் என்றால் தன்னை மறத்தல். புறவுலக தாக்கங்கள் ஏதுமின்றித் தன்னையே மறந்திருக்கின்ற நிலை நூல்களை ஆழ்ந்து படிக்கும் போது ஏற்படும். புத்தகங்களுக்குள் புகுந்து கொண்டால் புறஉலகை மறந்து விடுகிற ஆனந்த நிலையை உணர முடியும். ஆழ்ந்து படிக்கிற அத்தனை பேருக்கும் இத்தகைய அனுபவம் இருக்கும்.

எஸ். கீதாஞ்சலி...


Add new comment

Or log in with...