தமிழர் செவ்வியல் இசைப்பா வடிவங்கள் நூல் வெளியீட்டு விழா

தொகுப்பு ஆசிரியர்கள் திருமதி சுபா ஷாமினி கந்தசாமி, ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி

திருமதி சுபா ஷாமினி கந்தசாமி நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரியில் 38 வருடங்களுக்கு மேல் சங்கீத ஆசிரியராக கடமையாற்றி நீர்கொழும்பில் இசையை வளர்க்க அயராது உழைத்தவர். ஓய்வுபெற்ற பின் ஸப்தசுர கான கலாலயம் என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கி வீணை, வயலின், மிருதங்கம், வாய்ப்பாட்டு போன்ற வகுப்புக்களை வைத்து நீர்கொழும்பில் ஒரு இசைப் பரம்பரையை உருவாக்க பாடுபட்டு வருகிறார். நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை பண்ணிசை வகுப்புக்களை இலவசமாக நடத்தி வருகின்றார்.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் சுமார் 20 வருடங்களுக்கு மேல் உறுப்பினராக இருந்து சங்க நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். இவர் அமரர் திருமதி சரஸ்வதி பாக்கியராஜா (கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர், நுண்கலைத்துறை விரிவுரையாளர்) இவரின் பெரியதாயாரும் குருவும் ஆவார். இவரது தாயார் மிருதங்க வித்துவானாக இருந்து சரஸ்வதி பாக்கியராஜாவின் இசைக் கச்சேரிகளுக்கு பக்கவாத்தியம் வாசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி

ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 35 வருடங்களுக்கு மேலாக 7 தடவை பொதுச் செயலாளராகவும், உறுப்பாண்மைச் செயலாளர், கல்விக்குழுச் செயலாளர், இலக்கியக் குழுச்செயலாளர் போன்ற பதவிகளிலும் இருந்து சிறப்பாக பணிசெய்து தமிழுக்கும் தமிழ்ச் சங்க வளர்ச்சிக்கும் பாடுபட்டு வருகின்றார். இவர் நீர்கொழும்பிலிருந்து 35 கிலோமீற்றர் தூரம் பிரயாணம் செய்து தமிழ்ச் சங்கத்தில் வந்து பணிசெய்யும் ஒருவர். தமிழ்ச் சங்கத்தின் கட்டிட வளர்ச்சிக்காகவும் இயல், இசை, நாடக நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி தமிழ் வளர்ச்சிக்காகவும் செயலாற்றி வருகிறார்.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் தமிழிசையை வளர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பேராசிரியர் சபா ஜெயராசாவின் ஆலோசனை, வழிகாட்டலில் தமிழிசை ஆய்வரங்கு, சிறப்புமலர் வெளியீடு, தலைக்கோல் விருது வழங்குதல், தமிழிசைப் போட்டிகளை இலங்கை பூராகவும் மாணவர்களிடையே நடாத்துதல் போன்ற பணிகளை முன்னெடுத்து வருகிறார். அத்தோடு வாக்கியகாரர் வரிசையில் இராக அளிக்கை, தமிழிசை விழா போன்ற பணிகளை முன்னெடுத்த ஒருவர். ஆரம்ப காலத்தில் அமரர் கலாநிதி மீரா வில்லராஜர் அவர்களின் ஒத்துழைப்புடன் செய்த இசை செல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.

தமிழிசையில் மிகுந்த ஈடுபாடு காரணமாக பேராசிரியர் சபா ஜெராசாவின் ஆலோசனைக்கு அமைவாக தமிழர் செவ்வியல் இசைப்பா வடிவங்கள் என்ற இந்திய, இலங்கை தமிழிசை பாடல்களை உருவாக்கியவர்களின் சிறு குறிப்பும் பாடல்களும் கொண்ட தொகுப்பு நூலை 28.01.2023 சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு வெளியிடவுள்ளார். இந்நூல் மாணவர்களுக்கு பெரும் பிரியோசனமாக அமையும் எனலாம்.

பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையிலான இவ்வைபவத்தில் பிரதம விருந்தினராக கொழும்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், சிறப்பு விருந்தினர்களாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனன், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொதுச்செயலாளர் வே. கந்தசாமி ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ச் சேவை ஆலோசகர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் நடைபெறும். தமிழ் வாழ்த்தினை செல்விகளான பிருந்தா ரவிதாஸ், சுபலஷிகா கேசவன் ரெட்டியார், சங்கரிப்ரியா தேவபிரகாசம், கபிலாஷினி நந்தகுமார் ஆகியோர் இசைப்பர். வரவேற்புரையை சட்டத்தரணி திரு.விநோதன் அபயன், தொடக்கவுரையை கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், வாழ்த்துரையினை தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு.தே. செந்தில்வேலவர், இசைத்துறையில் ஓய்வுநிலை ஆசிரியர் ஆலோசகர் திரு. வி.கணேசலிங்கம், கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நிதிச்செயலாளர் செல்வ திருச்செல்வன், அறிமுகவுரையை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி க. இரகுபரன், நயவுரையை பேராசிரியர் வ. மகேஸ்வரன் ஆகியோர்கள் நிகழ்த்துவார்கள்.

தம்பதியினர் பலர் மங்கல விளக்கேற்றி விழாவை சிறப்பாக ஆரம்பித்து வைப்பார்கள் ஏற்புரையை ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி நிகழ்த்துவார்.

தொகுப்பு:

கே.பொன்னுத்துரை...


Add new comment

Or log in with...