இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் பாடத்திட்டங்களை உருவாக்க வலியுறுத்து

- இந்திய மத்திய கல்வி அமைச்சர் 

உலகளாவிய வாய்ப்புகளுடன் இந்திய இளைஞர்களை இணைப்பதற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதன் அவசியத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சுட்டிக்காட்டியுள்ளார். 

தேசிய திறன் மேம்பாட்டு இயக்க வழிகாட்டல் குழுவின் மூன்றாவது கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார். 

2030 ஆம் ஆண்டாகும் போது 29 மில்லியன் திறன் விருத்தி தொழிலாளர் பற்றாக்குறைக்கு இந்தியா முகம் கொடுக்கும் என்று சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் திறன் மேம்பாட்டு வேலைத்திட்டங்களில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. 

அந்த வகையில் தேசிய திறன் மேம்பாட்டு இயக்க வழிகாட்டல் குழுவின் மூன்றாவது கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய கல்வி அமைச்சர், இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்வதற்கு திறன் மேம்பாட்டின் அவசியம் தெளிவாக உணரப்பட்டுள்ளது. மக்களை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்ல அரசாங்கம் கவனம் செலுத்தும் முக்கிய பகுதிகளில் ஒன்றாகவும் திறன் விருத்தி உள்ளது. 

இதன் நிமித்தம் 'திறன் இந்திய இயக்கம்' என்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்திய இளைஞர்களை உலகளாவிய வாய்ப்புக்களுடன் இணைப்பதற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும். அத்தோடு திறன் மேம்பாட்டு வேலைத்திட்டங்களைத் திட்டமிட்ட அடிப்படையில் விரிவான முறையில் முன்னெடுக்கவும் தவறக்கூடாது. 

கைத்தொழில் துறைக் கேள்விகளுக்கும் திறன் விருத்தித் தேவைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டங்களைத் தயாரித்து செயற்படுத்துவதை இவ்வியக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.  இதன் ஊடாக வருடமொன்றுக்கு பத்து இலட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

இவ்வாறு திறன் விருத்தி தொழில் பயிற்சி பெற்றுக்கொள்பவர்களுக்கு தொழில்துறை அங்கீகாரம் பெற்ற கற்றல் மத்திய நிலையங்களில் சான்றிதழ்கள் வழங்கப்படும். தொழிற்சந்தைக்கு ஏற்ப அளிக்கப்படும் பயிற்சிகளும் சான்றிதழ்களும் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்களை விரைவாகப் பெற்றுக்கொள்ளப் பெரிதும் உதவும் என்றும் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...