சாய்ந்தமருது விவகாரம்; கல்முனை மாநகர வேட்புமனு ஏற்பது தொடர்ந்தும் இடைநிறுத்தம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கல்முனை மாநகர சபைக்கு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை விசாரணை முடியும் வரை நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (17) இது தொடர்பான மனு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இன்றையதினம் (19) வரை அதற்கான இடைக்கால தடையுத்தரவை வழங்ககியிருந்த உயர் நீதிமன்றம் தற்போது குறித்த விசாரணை நிறைவடையும் வரை அதனை நீடித்துள்ளது.

விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட, மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற குழு முன்னிலையில் குறித்த மனு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியிருந்தது.

சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த, அரச சேவை ஆணைக்குழு உறுப்பினர் ஏ.எல்.எம். சலீம் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதி ஏ.ஆர்.எம். அசீம் உள்ளிட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 2019 இல் சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை ஒன்றை வழங்கும் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டதைத்  தொட‌ர்ந்து மேற்ப‌டி வ‌ர்த்த‌மானி அறிவித்த‌ல் இடைநிறுத்த‌ப்ப‌ட்ட‌து.  எனினும்  மற்றுமொரு வ‌ர்த்த‌மானி மூல‌ம் அது இர‌த்து செய்ய‌ப்ப‌ட‌வில்லை.

இந்நிலையில் இவ்வாறு குறித்த வர்த்தமானி செய்ய‌ப்ப‌டாத‌ நிலையில் சாய்ந்தமருதுக்கான ச‌பையும் வ‌ழ‌ங்கப்படாத நிலையிலும் சாய்ந்தமருது காணப்படுகின்ற க‌ல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்த‌லை நடாத்துவது அடிப்ப‌டை உரிமை மீற‌ல் என‌ தீர்ப்பு வழங்குமாறு குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து குறித்த மனு விசாரணையை எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Add new comment

Or log in with...